காட்டில் காணாமல் போன 50 வயது நபர்.. குடிபோதையில் போலீஸாருடன் தன்னை தானே சேர்ந்து தேடிய காமெடி
அங்காரா: துருக்கியில் அடர்ந்த காட்டில் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க சென்ற 50 வயது நபர் காணாமல் போனதை அடுத்து நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர்களுடன் சேர்ந்து அந்த நபர் தன்னை தானே தேடிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
துருக்கியின் புருஸா மாகாணத்தை சேர்ந்தவர் பேஹான் முட்லு (50). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்காக இனிகாலில் உள்ள அடர்ந்த வனப்பகுதிச் சென்றுள்ளார்.
அங்கு இருள் சூழ்ந்த நேரத்தில் அனைவரும் போதையில் இருந்த நிலையில் முட்லுவோ அளவுக்கு அதிகமான போதையில் இருந்துள்ளார்.

முட்லுவை காணவில்லை
இந்த நிலையில் அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்றுக் கொண்டிருந்தனர். காட்டை விட்டு வெளியே வந்த போதுதான் தம்முடன் இருந்த முட்லுவை காணவில்லை என தெரியவந்தது. இதனால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரவு நேரம் என்பதால் அடர்ந்த காட்டில் மீண்டும் போய் முட்லுவை தேடுவதற்கு அச்சமடைந்தனர்.

உள்ளூர் போலீஸில் புகார்
பின்னர் உள்ளூரில் உள்ள போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அந்த காட்டில் போய் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முட்லு என்ன ஆயிற்று, யாரை தேடுகிறீர்கள் என கேட்டார். அதற்கு போலீஸார், இங்கு நண்பர்களுடன் வந்த ஒருவர் காணாமல் போய்விட்டார், அவரை தேடிக் கொண்டிருக்கிறோம் என போலீஸார் கூறினர்.

ஒரு மணி நேரம்
அதற்கு முட்லு நானும் சேர்ந்து உங்களுக்கு உதவுகிறேன் என கூறிக் கொண்டு தன்னையே கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் போலீஸாருடன் இணைந்து தேடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் போலீஸார் "முட்லு முட்லு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்" என கூக்குரலிட்டனர். அப்போது அங்கிருந்த முட்லு, "என்னாது முட்லுவா, அதுநான் தான் சார்" என கூறியவுடன் போலீஸாருக்கு வந்ததே பாருங்கள் கோபம்.

முட்லுவை எச்சரித்த போலீஸ்
இதை உணர்ந்த முட்லு, "சார் எனக்கு கடுமையான தண்டனையை கொடுத்துடாதீங்க. எங்கப்பாவுக்கு தெரிந்தால் என்னை கொன்றுவிடுவார்" என கெஞ்சியுள்ளார். பின்னர் முட்லுவை எச்சரித்த போலீஸார் அவரை அவரது நண்பர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் முட்லுவிடம் நடத்திய விசாரணையில் சய்யாகா என்ற பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில் அங்கு சென்ற முட்லு சிறிது நேரம் பணியாற்றிவிட்டு அங்குள்ள நண்பர்களுடன் குடித்துவிட்டு அங்குள்ள வில்லாவில் நண்பர்களுடன் படுத்து தூங்கிவிட்டார்.

போன் எண்ணும் கிடைக்கவில்லை
இதனால் முட்லு காணாமல் போய்விட்டதாக அவரது நண்பர்கள் நினைத்துக் கொண்டனர். போலீஸார் முட்லுவுக்கு போன் செய்த போது அவரது நம்பர் ரீச் ஆகவில்லை. அப்போது அதிகாலை 5 மணிக்கு போலீஸார் இருந்ததால் ஏதோ விபத்து என நினைத்துக் கொண்டு முட்லு அவர்களிடம் விசாரித்ததும் அங்கு போலீஸாருடன் சேர்ந்து தன்னை தானே தேடிய கதையும் தெரியவந்தது. முட்லு என்றாலே துருக்கி மொழியில் சந்தோஷம், மகிழ்ச்சி என்ற பொருளாம். பெயருகேற்ப அனைவருக்கும் தனது செயல்பாடுகள் மூலம் சிரிப்பை வரவழைத்துவிட்டதாக நண்பர்கள் கேலி செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications