லண்டனில் பதுங்கல்.. 4 ஆண்டுக்கு பிறகு நாடு திரும்பும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்! பரபர பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 4 ஆண்டுகளாக லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நிலையில் அவர் பாகிஸ்தான் திரும்ப உள்ளார். இதற்கான தேதி உள்ளிட்ட முக்கிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானில் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் செயல்பட்டு வந்த நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவரது ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்ந்தது.

இதையடுத்து பிஎம்எல்-என் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் ) கட்சியின் தலைவராக உள்ள ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். நாடாளுமன்ற பதவிக்காலம் முடிய சில நாட்கள் இருந்த நிலையில் அவர் முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார்.
இந்நிலையில் தான் விரைவில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் நாடாளுமன்ற கலைப்புக்கு சில நாட்களுக்கு முன்பு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே தான் ஷெபாஸ் ஷெரீப்பின் அண்ணனும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு விரைவில் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதாவது பனாமா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் நவாஸ் ஷெரீப் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம். இத்தகைய சூழலில் தான் அவர் உடல்நலனை காரணம் காட்டி சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.
நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் வழங்கிய நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பவே இல்லை. லண்டனிலேயே தங்கினார். தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமரான நிலையில் அவர் நாடு திரும்புவார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப உள்ளார்.
இதுதொடர்பான முக்கிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது வரும் 21ம் தேதி துபாயில் இருந்து அவர் பாகிஸ்தான் திரும்புகிறார். ‛உம்மின் இ பாகிஸ்தான்' எனும் விமானத்தில் அவர் நாடு திரும்புகிறார் என பாகிஸ்தானின் ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் பத்திரிகையாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் பாகிஸ்தான் திரும்புகிறார். விமானத்தில் மொத்தம் 150 பேர் பயணிக்க உள்ளனர். இந்த விமானத்தில் துபாயில் இருந்து புறப்படும் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் லாகூருக்கு சென்று இறங்குவார். இருப்பினும் அதற்கு முன்பாக அவர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இறங்கி பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
இந்நிலையில் தான் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பும் வகையில் நவாஸ் ஷெரீப் தற்போது லண்டனில் இருந்து வெளியேறி உள்ளார். தற்போது அவர் சவுதி அரேபியாவில் உள்ளார். நண்பர்களுடன் அவர் உம்ராவை முடித்து கொண்டு அவர் சில முக்கிய மீட்டிங்குகளை நடத்த உள்ளார். அதன்பிறகு வரும் 18 ம் தேதி துபாய் செல்வதோடு அங்கிருந்து நாடு திரும்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நவாஸ் ஷெரீப்பின் எதிர்க்கட்சியாக இம்ரான் கான் உள்ளார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில் தான் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புகிறார். இதனால் அவரது வருகை என்பது அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications