சீனாவை தொடர்ந்து வியட்நாம், தென் கொரியாவிலும் கொரோனா அதிகரிப்பு.. என்ன காரணம்? பின்னணி!
சியோல்: சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் தென்கொரியாவில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வியட்நாமிலும் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது.
சீனாவில் முதன் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 2019 இறுதியில் இங்கிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவ துவங்கியது.
மேலும் ஊரடங்கு எனும் பெயரில் உலக நாடுகளை முடக்கி போட்டது. தொடர்ந்து உருமாறிய கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளி்ல் பொதுமக்களை தாக்கி வந்தது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளில் பல லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் இதுவரை 3 முறை கொரோனா அலை வந்துள்ளது. தற்போது அதிர்ஷ்டவசமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் தான் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. சீனாவில் உள்ளூரில் வசிப்பவர்கள் மூலமாகவும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் வழியாகவும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 5,280 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் உச்சம்
தற்போது சீனாவை தொடர்ந்த தென்கொரியாவிலும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள அந்தநாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

உலக பாதிப்பில் முதலிடம்
இதுகுறித்து தென் கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் கூறுகையில், " ஒரே நாளில் 4,00,741 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 293 பேர் பலியாகி உள்ளனர். 2021 ஜனவரியில் நாடு தனது முதல் கொரோனா பாதிப்பை கண்டறிந்தது. அன்று முதல் இன்று வரை ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். நாட்டில் இதுவரை மொத்தம் 76 லட்சத்து 29 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என கூறியுள்ளது.

இந்தியாவில் 4ம் அலை
கடந்த 7 நாட்களில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகள் பட்டியலில் தென்கொரியா முதலிடத்தில் உள்ளது. இங்கு 23 லட்சத்து 58 ஆயிரத்து 878 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த படியாக வியட்நாமில் 17 லட்சத்து 95 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3ம் அலை முடிவுக்கு வந்தாலும் கூட 4வது அலைக்கான கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதாவது ஜூன் மாதம் துவங்கும் கொரோனா 4ம் அலை தொடர்ந்து 4 மாதம் பாதிப்பை ஏற்படுத்தும் என ஐஐடி கான்பூர் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications