ஏர்போர்ட்டில் டான்ஸ்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ‘சர்ப்ரைஸ்’ வரவேற்பு கொடுத்த அமெரிக்க வாழ் தமிழர்கள்!
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் ஸ்டாலினையும், அவரது துணைவியாரையும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முதல்வரை வரவேற்கும் வகையில் ஒரு குழுவினர் நடனம் ஆடினர்.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார். அமெரிக்கவாழ் தமிழர்கள், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வர் ஸ்டாலினையும், அவரது துணைவியாரையும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், முதல்வரை வரவேற்கும் வகையில் அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள் குழுவினர், தமிழின் பெருமைகளை சிறப்பிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி நடனம் ஆடினர்.
அமெரிக்கா சென்றடைந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவை ஈட்ட, வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவுக்கு வந்திருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
"செம்மொழியான தமிழ்மொழியே.." பாடலுக்கு அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆடிய நடனத்தை ரசித்தார் முதல்வர் ஸ்டாலின். பின்னர், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலினை அமெரிக்காவில் வரவேற்ற புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "Eagle has landed" என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். பின்னர், ஆகஸ்ட் 31 ஆம் தேதி புலம் பெயர் தமிழர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 2 ஆம் தேதி சிகாகோவில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார்.

செப்டம்பர் 7 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள அயலக தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து 9 ஆம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சந்திப்புகளை மேற்கொள்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications