டிரம்புக்கு மூக்கறுப்பு.. இந்தியாவை மிரட்டி பணிய வைக்க முடியாதது ஏன்? ரஷ்யா விளக்கம்
மாஸ்கோ: ‛‛சீனாவும், இந்தியாவிடம் மிரட்டல் வேலைக்கு ஆகாது. இப்படி பேசுவது ஒருபோதும் பலன் அளிக்காது. இப்போது இருநாடுகளிடமும் அமெரிக்கா வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது இந்தியா, சீனாவிடம் வரி விதிப்பு மிரட்டல் வேலைக்கு ஆகவில்லை என்பதை அமெரிக்கா புரிந்து வைத்திருப்பதை காட்டுகிறது'' என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டரிம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறைக்கு 25 சதவீதம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீதம் என்று வரி போட்டார் மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று அழுத்தம் கொடுத்தார்.

நம் நாடு கண்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அதுமட்டுமின்றி வழக்கத்தை விட ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இதனால் டிரம்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சீனாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் மிரட்டல் இந்தியா, சீனாவிடம் பலிக்காது என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரஷ்யாவின் 1 டிவி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: "சீனாவும், இந்தியாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள். எனக்கு பிடிக்காததை நிறுத்துங்கள் இல்லாவிட்டால் வரிகளை விதிப்பேன் என்று மிரட்டுவது இருநாடுகளிலும் வேலை செய்யாது.
இப்படி பேசுவது ஒருபோதும் பலன் அளிக்காது. இந்தியா - அமெரிக்கா, அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. சீனா, இந்தியாவிடம் வரி விதிப்பு மிரட்டல் வேலைக்கு ஆகாது என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டிருப்பதை தான் இது காட்டுகிறது.
மேலும் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் கோரிக்கையை எதிர்க்கின்றன. அமெரிக்காவின் அழுத்தத்தை விட தங்களின் சொந்த நாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு அதற்கான கொள்கையுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் அமெரிக்கா ஒவ்வொரு நாடுகளின் பொருளாதார நிலையை குறைத்து மதிப்பீடு செய்கிறது. இது அமெரிக்காவுக்கு தான் சிரமங்களை ஏற்படுத்தும்.
மேலும் ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் இதுவரை இல்லாத அளவுக்கு டிரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்தபோது எங்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு இருந்தது'' என்றார்.












Click it and Unblock the Notifications