இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடிக்கு ரெடி.. ராணுவத்திற்கு அயதுல்லா உத்தரவு! போச்சு!
டெக்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரானின் தலைநகர் உள்பட 2 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லியமாக இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் மீது போருக்கு தயாராகுங்கள் என்று ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனி அந்த நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இருநாடுகள் இடையே போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் மற்றும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதலால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபமடைந்துள்ளது. இதற்கு காரணம் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருவது தான்.

இஸ்ரேல் தாக்குதலில் தொடர்ந்து ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால் கடந்த 1ம் தேதி ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலும் - ஈரானும் அண்டை நாடுகளாக இல்லை. இருநாடுகளும் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை.
ஆனாலும் கூட ஈரான் பிற நாடுகளின் வான்எல்லை வழியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கடந்த 1ம் தேதி அதிகாலையில் இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 185 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலில் இருந்து ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்ந்து வருவதால் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானில் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த விபரங்களும் உடனடியாக தெரியவில்லை.
இந்நிலையில் தான் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடிக்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனி அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு வழங்கிய உத்தரவு தான் முக்கிய காரணமாகும். இதுதொடர்பாக அயதுல்லா காமேனி சில கண்டிஷன்களோடு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக ‛தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது. 1,000 பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தலாம். இதனால் நாமும் இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு தயாராக இருக்க வேண்டும். இருப்பினும் சில கண்டிஷன்களை நாம் மனதில் வைத்து செயல்பட வேண்டும். இஸ்ரேல் நம் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ட்ரோன்கள் சேமித்து வைத்திருக்கும் இடங்களை சேதப்படுத்தினால் போரை தொடங்க வேண்டாம். அதேவேளையில் எண்ணெய் கிடங்குகள், எரிசக்திக்கான கட்டமைப்புகள், அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினாலோ அல்லது மூத்த ராணுவ அதிகாரிகளை கொன்றாலோ நாம் உக்கிரமாக பதிலடி கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஈரான் அதிகாரிகள் தரப்பில், ‛‛இஸ்ரேலின் தாக்குதல் கடுமையாக இருந்தால் ஐஆர்ஜிசி எனும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (Islamic Revolutionary Guard Corps or IRGC) மூலம் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தலாம். பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை நிறுத்துவது பற்றியும் பரிசீலனை செய்யலாம். இதுதவிர ஈரான் ஆதரவு அமைப்புகளாக உள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதிகள் மூலம் இஸ்ரேல் மீதான தாக்குதலை அதிகரிக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கைகளை பொறுத்தமட்டில் இஸ்ரேலின் தாக்குதலை பொறுத்து தான் முடிவு எடுக்க வேண்டும்'' என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடிக்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications