காலியாகும் காசா? ஹமாஸ் செய்த தவறு? பாலஸ்தீனியர் கூறிய அந்த விஷயம்! இஸ்ரேலால் கலங்கும் மக்கள்-ஷாக்
இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு உணவு, ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மின்சாரம், உணவு இன்றி பசி பட்டினோடு பேய் நகரத்தில் வாழ்வது போல் உணருவதாக பாலஸ்தீனியர் கூறியிருப்பது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே இன்று 6வது நாளாக யுத்தம் நடக்கிறது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய மோதல் நாள்தோறும் தீவிரமாகி வருகிறது. ஹமாசின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக நடத்தி வருகிறது.

இதனால் அங்குள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்போது வரை இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதில் பாலஸ்தீனியர்கள் 1000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
காசாவை பொறுத்தமட்டில் மொத்த மக்கள் தொகை என்பது 23 லட்சம் தான். இத்தகைய சூழலில் தாக்குதல் இன்னும் தீவிரமாகும் என்ற இஸ்ரேல் எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கி வருகின்றன. குறிப்பாக ஐநாவின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி கட்டடங்களில் மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர். தற்போது வரை 1.80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் பிற நாடுகளில் அகதிகளாக இடம் பெயர முயற்சித்து வருகின்றனர்.
குறிப்பாக இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளுக்கு அவர்கள் செல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் தற்போதைய யுத்தத்தின் காரணமாக அவர்கள் காசா மக்களை அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் காசா பகுதி மக்கள் பெரிய சிக்கலில் சிக்கி உள்ளனர். அதோடு தற்போது காசாவை முற்றுகையிட்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது பாலஸ்தீனத்தின் என்கிளேவ் மின் உற்பத்தி நிலையம் என்பது எரிபொருள் இன்றி உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதனால் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
இதுதவிர காசாவில் உணவு தட்டுப்பாடு என்பது ஏற்பட தொடங்கி உள்ளது. தண்ணீர், காய்கறிகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை கிடைப்பதில் சிக்கல் உருவாகி உள்ளது. இதனால் பசி, பட்டினியால் மக்கள் வாட தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி கசாவின் ஆயிஷா அபு என்பவர் கூறுகையில், ‛‛தொடர்ந்து குண்டுகள் வெடிக்கின்றன. இது வீடுகளை உலுக்கி விடுகின்றன. இப்போதைக்கு எங்கள் கையில் எதுவும் இல்லை. பிரார்த்தனை செய்வது மட்டுமே எங்களின் கைகளில் உள்ளது'' என கண்ணீருடன் கூறியுள்ளார்.
அதேபோல் காசாவில் வசிக்கும் மசென் முகமது என்பவர் கூறுகையில், ‛‛காலை முதல் இரவு வரை குண்டுகள் வெடிக்கின்றன. இதனால் நாங்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். குடும்பத்தினரோடு இரவை ஒன்றாக கழித்தோம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் ஒரு பேய் நகரத்தில் இருப்பது போல் உணர்ந்தோம்'' என்றார்.
மேலும் காசாவின் சுகாதார அமைச்சகம் சார்பில், ‛‛காசாவிவின் அல்-ஷிஃபா மருத்துவமனை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவ பொருட்கள் வேகமாக தீர்ந்து வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மருத்துவ பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் காசா மக்கள் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது வலைதளங்களில் பலரும் ஹமாஸ் அமைப்பை குற்றம்சாட்ட தொடங்கி உள்ளனர். அதாவது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு காசா பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் ஹமாஸ் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யாதது தான் தற்போது அங்குள்ள மக்கள் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications