நேபாளத்தில் அடுத்தடுத்து 4 முறை நடுங்கிய பூமி... பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு
காட்மாண்டு: நேபாளத்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி போக்ரா நகரை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டிப்போட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 8,500 பேர் பலியானார்கள், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அந்த பாதிப்பிலிருந்து நேபாள மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. அதற்குள், நேற்று மீண்டும் காத்மாண்டுவை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் நான்கு முறை அடுத்தடுத்து ஏற்பட்டது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 83 கி.மீ. தொலைவில், எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே, 15 கி.மீ. ஆழத்தில் நேற்று நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. நண்பகல் 12.35 மணிக்கு ரிக்டர் அளவில் 7.3 அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் இடைவெளியில் ரிக்டர் அளவில் 6.2 ஆக 2-வது நில அதிர்வு பதிவானது.

தொடர் அதிர்வுகள்
அதைத் தொடர்ந்து இருமுறை சிறு, சிறு அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டன. இவை ஆப்டர்ஷாக் எனப்படும் நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் என்று அமெரிக்க பூகோளவியல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு நேபாளத்தின் பல பகுதிகளிலும், இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது.

மண்ணில் புதையுண்ட கட்டிடங்கள்
கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிந்துபால்சுவுக், தோலகா ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. அதே பகுதியில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வால் மீதமிருந்த பல கட்டிடங்கள் இடிந்து மண்ணில் புதைந்தன.

வீதிக்கு வந்த மக்கள்
கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில், வீடுகளையும், உறவுகளையும் இழந்திருந்த நேபாள மக்கள் நேற்று நிலஅதிர்வு ஏற்பட்டவுடன் அலறியடித்து வீட்டைவிட்டு ஓடி சாலைக்கு வந்தனர். கண்ணீருடன் காணாமல் போன உறவினர்களை தேடி வருகின்றனர்.

68 பேர் பலி
நிலநடுக்கத்திற்கு இதுவரை 68 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிந்துபால்சவுக் பகுதியில் 4 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர், 12 பேர் காயமடைந்துள்ளனர் இப்பகுதிகளில் உயிர்சேதம் மேலும், அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று உள்துறை அமைச்சக அதிகாரி லட்சமி தகால் கூறியுள்ளார்.

சரிந்து விழுந்த மலை
காத்மாண்டிலிருந்து 45 கி.மீ. தொலைவில் துன்சே பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு மலை, நிலநடுக்கத்தின் போது, பயங்கரமாக சத்தத்துடன், சரிந்து விழுந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை அமுக்கியது. இதில் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதம் குறித்து தெரியவில்லை.

நடுங்கும் குளிரில்
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காத்மாண்டில் உள்ள திரிபவன் சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிந்தைய அதிர்வுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இதனால், திறந்தவெளியில் தங்கியிருங்கள், வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து எப்போது என்ன நடக்குமோ என்று உயிருக்கு அஞ்சியவாறு நேபாளவாசிகள் அச்சத்துடன் நடுங்கும் குளிரில் வீதிகளில் இரவுப் பொழுதை கழித்தனர்.












Click it and Unblock the Notifications