வளைகுடாவுக்கு சூப்பர் செய்தி! ஐக்கிய அமீரக தூதரை நியமித்த ஈரான்! 8 ஆண்டில் முதல்முறை.. ஏன் முக்கியம்
கெய்ரோ: வளைகுடா நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையேயான உறவுகள் மெல்ல சீரடைந்து வருகிறது. இந்தச் சூழலில், 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு ஒரு தூதரை ஈரான் நியமித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த மோதல் மெல்ல மேம்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சீராகி வருவதாகத் தெரிவித்த ஐக்கிய அமீரகம், ஈரானுக்கான தனது தூதரை நியமித்தது.
அதைத் தொடர்ந்தே இப்போது ஐக்கிய அமீரகத்திற்கான தூதரை ஈரான் நியமித்துள்ளது. ஈரான் நியமித்துள்ள இந்த புதிய தூதர் ரெசா அமெரி, வெளியுறவு அமைச்சகத்தில் தலைமை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தூதர் நியமனம்: கடந்த 2016இல் ஷியா மதகுருவைச் சவுதி அரேபியா தூக்கிலிட்டது. அதைத் தொடர்ந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் சவுதி தூதரகத்தை ஈரான் மக்கள் சூறையாடினர். இதன் காரணமாக ஐக்கிய அமீரகம் ஈரான் உறவு மோசமடைந்தது. அப்போது முதல் ஈரானில் இருந்து ஐக்கிய அமீரகம் தள்ளியே இருந்து வருகிறது. ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவும் இந்த மோதல், வளைகுடாவில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தியது.
அமெரிக்கா ஆதரவு: மத்திய கிழக்கில் ஏமன் முதல் சிரியா வரையிலான மோதல்களை இதுவே காரணமாக அமைந்தது. இந்தச் சூழலில் தான் மாற்றத்தின் தொடக்கமாக ஐக்கிய அமீரகத்திற்குத் தூதரை ஈரான் நியமித்துள்ளது. அதேபோல ஏமனில் நீண்டகாலமாக நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதையும் ஈரான் வரவேற்றுள்ளது.
முன்னதாக ஏமனில் அமைதி நிலவும் செயல்முறைக்கு ஈரான் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஏமனுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் திமோதி லெண்டர்கிங் கூறியிருந்தார். இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, "இது மகிழ்ச்சி தருகிறது. போர் ஆரம்பித்த பிறகு முதல்முறையாக அமைதி திரும்பியுள்ளது" என்றார்.
ஏன் முக்கியம்: ஓராண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் அக். மாதமே முடிந்துவிட்டாலும் இன்னும் அங்கு அமைதி நிலவி வருவது நல்ல சமிஞ்கை என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஏமன் தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும்பகுதி கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகளில் இருந்து தான் வருகிறது. வளைகுடா நாடுகளுக்கு சுமுகமான உறவு இல்லை என்றால் அது கச்சா எண்ணெய் உயர்விலும் முடியும்.
ஈரான்- இஸ்ரேல் மோதல்: இது நல்லவொரு நடவடிக்கை என்றாலும் கூட, மறுபுறம் ஈரான் இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்தே வருகிறது. சமீபத்தில் ஈரான் பாதுகாப்பு அமைச்சக வளாகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலை முறியடித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல்களை இஸ்ரேல் தான் திட்டமிட்டு நடத்தி வருவதாக ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், இதை ஈரான் ஒப்புக் கொள்ளவும் இல்லை. அதே சமயம் நிராகரிக்கவும் இல்லை.












Click it and Unblock the Notifications