ஐஸ்கிரீம் டிரக்குகளில் சடலங்கள்.. இஸ்ரேல் ஹமாஸ் போரின் கோர முகம்!
அவிவ்: காசா பகுதியில் போர் ஒரு வாரத்தைக் கடந்து தொடரும் நிலையில், அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பது விவரிக்கும் வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளது..
கடந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மேலும், இஸ்ரேலுக்குள் வந்த ஹமாஸ் படை பலரைப் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இப்போது இஸ்ரேல் இறங்கியுள்ளது. காசா பகுதியின் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த சண்டை ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்கிறது.
தொடரும் போர்: இப்படி இஸ்ரேல் காசா இடையேயான யுத்தம் ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே காசாவில் இப்போது என்ன இருக்கிறது என்பதை விளக்கும் வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் உயிரிழந்தோர் உடல்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இருப்பினும், அங்கே பிணவறைகளில் சடலங்களை வைக்கக் கூட இடமில்லையாம்.
இதனால் போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உடல்களை ஐஸ்கிரீம் டிரக்குகளில் உள்ள ஃப்ரீசர்களில் வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளில் இல்லாத வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தியதே இந்த பிரச்சினைக்குக் காரணம். இதனால் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், காசா பகுதியில் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாகக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஐஸ்கிரீம் டிரக்குகள்: இதற்கிடையே காசா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் யாசர் அலி இது தொடர்பாகக் கூறுகையில், "எங்களிடம் இருக்கும் பிணவறையில் 10-15 உடல்களை மட்டுமே வைக்க முடியும். வழக்கமான காலங்களில் இதுவே போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போது தொடர்ச்சியாக உடல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் நிலைமை சமாளிக்க நாங்கள் ஐஸ்கிரீம் தொழிற்சாலைகளில் இருந்து ஐஸ்கிரீம் டிரக்குகளை வாங்கி வந்து நிறுத்தியுள்ளோம்" என்றார்.
அதன்படி மருத்துவமனைகளுக்கு அருகே ஃப்ரீசர் டிரக்குகளை வைத்து அதில் உயிரிழந்தோரின் சடலங்களை வைத்துள்ளனர். சடலங்களுடன் இருக்கும் அந்த டிரக்குகளில் இன்னும் கூட சிரிக்கும் குழந்தைகளின் படங்கள் இருக்கவே செய்கிறது. இந்த டிரக்குகள் மூலம் தான் சூப்பர் மார்கெட்களுக்கு ஐஸ்கிரீம்கள் டெலிவரி செய்யப்படுமாம். ஆனால், இப்போது அதில் ஐஸ்கிரீம்கள் இல்லை.. மாறாகப் போரில் உயிரிழந்தோரின் சடலங்களே உள்ளனர்.
இஸ்ரேல்: இந்த ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இஸ்ரேல் காசா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்றே தெரிகிறது. இதன் காரணமாகவே தெற்கு காசா பகுதியில் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. அடுத்த கட்டகமாகக் காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் படையெடுக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.
இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் காசா பகுதியில் வசிக்கும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாகப் பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும். 10,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காசா மருத்துவமனைகளில் ஏற்கனவே சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் கருவிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே காயமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மிகவும் சிக்கலான ஒரு சூழல் உருவாகியுள்ளது.
நிலைமை மோசம்: டாக்டர் யாசர் அலி இது குறித்து மேலும் கூறுகையில், "மருத்துவமனையில் இருக்கும் பிரதான பிணவறை, இந்த ஃப்ரீசர்கள் கூட நிலைமையைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. இதனால் நாங்கள் கூடாரங்களிலும் 20 முதல் 30 உடல்களை வைத்துள்ளோம். இப்போது காசா பகுதி நெருக்கடியில் உள்ளது.. போர் இப்படியே தொடர்ந்தால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய முடியாது. கல்லறைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன, அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications