இந்திய பொருட்களுக்கு மவுசு இல்லை! 'ஆசியான்' மாநாட்டில்.. என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி?
மணிலா: பிலிப்பைன்சில் 'ஆசியான்' மாநாடு தொடங்கியிருக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். ஏற்கெனவே நமக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை 7 மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், இந்த மாநாட்டில் 'ஆசியான்' நாடுகளை இந்தியாவுக்கு சாதகமாக முடிவெடுக்க வைக்க பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்யப்போகிறார்? என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது.
புருனே, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகள் சேர்ந்ததுதான் இந்த 'ஆசியான்' அமைப்பு.

ஆசியான் மாநாடு
இந்த அமைப்பின் மாநாடு மணிலாவில் தொடங்கியிருக்கிறது. இதில் பங்கேற்க நாளை பிலிப்பைன்ஸ் செல்கிறார் மோடி. 'ஆசியான்' மாநாடு, இந்திய பொருளாதார வல்லுநர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், கடந்த 2010ம் ஆண்டு இந்தியா-ஆசியான் சரக்கு வர்த்தக ஒப்பந்தம் (AITIGA) போடப்பட்டது. அப்போது இரு தரப்புக்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை 7 பில்லியன் டாலர் அளவுக்குதான் இருந்தது. அதாவது ஆசியான் நாடுகளிலிருந்து நமக்கு நிறைய பொருட்கள் வருகிறது. ஆனால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வது குறைந்து இருந்தது. காலப்போக்கில் இந்த பிரச்சனை சரியாகும் என்று நினைத்தால்.. 26 ஆண்டுகளில், இந்த பற்றாக்குறையின் அளவு 7 மடங்காக உயர்ந்து நிற்கிறது.
பிரச்சனை இதுதான். இப்போது வர்த்தக பற்றாக்குறை சுமார் 51.55 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. அதாவது.. ஆசியான் நாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்.. குப்பை போல இந்தியாவுக்குள் கொட்டப்படுகிறது. ஆனால், நம்மூர் பொருட்களை அவர்கள் வாங்குவதில்லை. 2025-2026ம் ஆண்டு நிலவரப்படி இரு தரப்பு வர்த்தகம் 128.38 பில்லியன் டாலராகும்.
- இந்தியா, ஆசியான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 38.41 பில்லியன் டாலர்
- ஆசியான் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 89.96 பில்லியன் டாலர்
- அதாவது இந்தியா இன்னும் 51.55 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இந்தியா, ஆசியான் நாடுகளை சேர்ந்த 79% பொருட்களுக்கு நம்மூர் சந்தையை தாராளமாக திறந்துவிட்டது. ஆனால், பதிலுக்கு ஆசியான் நாடுகள், நம்மூர் பொருட்களில் வெறும் 48.7% அளவுக்குதான் அனுமதி கொடுத்திருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் மருந்துகள், வேளாண் மற்றும் ஜவுளி பொருட்களுக்கு ஆசியான் நாடுகளில் கடுமையான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் சுங்க வரிகள் இருக்கின்றன. இது சமச்சீரற்ற வர்த்தக நடைமுறையாகும். மறுபுறம்.. சீனாவுடைய எலக்ட்ரானிக் பொருட்கள் ஆசியான் நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் குப்பைகள் போல கொட்டப்படுகின்றன.
எனவே இந்த விஷயத்திற்கு தீர்வு காண வேண்டும். AITIGA வர்த்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். மறு ஆய்வு செய்யும் பணி என்னவோ தொடங்கிதான் இருக்கிறது. ஆனால், ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மோடி, ஆசியான் மாநாட்டில்.. AITIGA ஒப்பந்த மறு ஆய்வு பணிகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். இந்திய பொருட்களுக்கு ஆசியான் நாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மோடி என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவேதான் இந்த மாநாடு, இந்திய பொருளாதார நிபுணர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
