4 கார்.. ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தோடு.. ஆப்கானிலிருந்து தப்பித்த அஷ்ரப் கானி?.. ரஷ்யா பரபரப்பு!
காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அந்நாட்டு முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி ஒரு ஹெலிகாப்டரில் பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம், ஆபரணங்களோடு தப்பித்ததாக கூறப்படுகிறது. இவர் நான்கு கார்களை எடுத்துக்கொண்டு இவர் நாட்டைவிட்டு பறந்து சென்றதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இன்னும் சில நாட்களில் தாலிபான் சார்பாக ஆப்கான் நாட்டிற்கான அதிபர் அறிவிக்கப்படுவார். தாலிபான் வெற்றிக்கு பின் ஆப்கான் நாட்டின் பெயர் இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என்ற புதிய பெயரை ஆப்கானிஸ்தானுக்கு தாலிபான்கள் வைத்துள்ளன. தாலிபான்கள் மொத்தமாக அந்த நாட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
மொத்தமாக ஆப்கானிஸ்தான் வீழ்ச்சி அடைய 90 நாட்கள் ஆகும் என்று அமெரிக்க உளவுத்துறை 3 நாட்களுக்கு முன்தான் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு 48 மணி நேரத்தில் தாலிபான்கள் மொத்தமாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளது.

ஆட்சி
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கடைசி நொடி வரை தாலிபான்களுக்கு எதிராக பேசி வந்தார். அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பும் கூட அவர் ஆப்கான் படைகளுக்கு ஆதரவாக நின்றார். கடைசி நாள் வரை தாலிபான்களை நாங்கள் எதிர்ப்போம், நான் பதவி விலக மாட்டேன் என்று அஷ்ரப் கானி அறிவித்து வந்தார். ஆனால் நேற்று போரின் கடைசி நாளில்தான் எல்லாம் மாறியது. நேற்று காலை ஜலாலாபாத் பகுதியை தாலிபான் கைப்பற்றியதும் அஷ்ரப் கானி அமைதியானார். அடுத்து காபூல் மட்டுமே மீதம் இருந்ததால் அவர் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார்.

கடைசி
கடைசியில் நேற்று பிற்பகலிலேயே காபூலுக்குள் தாலிபான்கள் நுழைந்தன. அடுத்த சில நிமிடங்களில் ஆட்சி மாற்றம் குறித்து காபூல் ஜனாதிபதி மாளிகையில் தாலிபான்களுக்கும் அஷ்ரப் கானிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. இனி கண்டிப்பாக தாலிபானை வீழ்த்த முடியாது என்பதை அஷ்ரப் கானி உணர்ந்து கொண்டார். தாலிபான்களும் இவரை கைது செய்தாலோ ஆயுதங்களை காட்டி மிரட்டி பணிய வைத்தாலோ சர்வதேச அளவில் பிரச்சனை வரும் என்பதால் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டது.

மிரட்டல்
இவரை கைது செய்தால் அது தாலிபான்களுக்கு எதிராக திரும்பும். தாலிபான்கள் இதனால் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தியது. பாதுகாப்பாக நீங்கள் வெளியேறும் வாய்ப்பை கொடுக்கிறோம். அமைதியாக எங்களை எதிர்க்காமல் பதவி விலகுங்கள் என்று தாலிபான்கள் அஷ்ரப் கானியிடம் கூறியது. இதை ஏற்றுக்கொண்டு அஷ்ரப் கானி நேற்று இரவு ராஜினாமா செய்தார். அவருக்கும் வேறு வழி இல்லை. அதோடு இரவோடு இரவாக காபூலில் இருந்து தஜிகிஸ்தானுக்கு விமானம் மூலம் தப்பி சென்றார். தாலிபான் அனுமதியோடுதான் இவர் தப்பி சென்றார். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இவரின் வெளியேற்றம் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Recommended Video

அதிர்ச்சி
இந்த நிலையில்தான் அஷ்ரப் கானி நான்கு கார் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தோடு தப்பி சென்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. காபூலில் இருக்கும் ரஷ்ய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தன்னிடம் இருந்த பல கோடி மதிப்புள்ள பணம், நகை, வைரங்களை இவர் ஹெலிகாப்டரில் வைத்து எடுத்து சென்றுள்ளனர். இன்னும் பல கோடிகள் இவரின் அறையில் இருந்துள்ளது. ஆனால் இதை ஹெலிகாப்டரில் வைக்க இடம் இல்லை. முடிந்த அளவு தனது சொத்துக்களை உள்ளே வைக்க முயன்றுள்ளார்.

வெளியேற்றம்
இதனால் அதை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு முடிந்த அளவு சொத்துகளை எடுத்துக்கொண்டு அவர் அங்கிருந்து வெளியேறி உள்ளார். இவர் தஜிகிஸ்தான் சென்றதாக செய்திகள் வெளியானாலும் அவரின் உண்மையான இருப்பிடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. அஷ்ரப் கானியின் உண்மையான இருப்பிடம் இப்போது சந்தேகத்திற்கு உரிய ஒன்றாகவே உள்ளது. இவர் அமெரிக்காவிற்கு சென்று இருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன. அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய விதம் வியப்பூட்ட கூடியதாக இருந்ததாகவும், அவர் மூட்டை மூட்டையாக பணங்களை அடுக்கியதை நேரில் பார்த்த சாட்சியங்கள் இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கோபம்
அதிபராக இருந்த அஷ்ரப் கானி கடைசி நொடியில் தாலிபானை எதிர்க்காமல் அடிபணிந்தது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் தாலிபான் படைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் ராணுவம் சரண் அடைந்ததையும் அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அஷ்ரப் கானி குறித்து ரஷ்யா இப்படி பேசி இருப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களை காப்பாற்றாமல், விமான நிலையத்தில் எல்லோரையும் துடிக்க வைத்துவிட்டு இப்படி மூட்டை மூட்டையாக சொத்துக்களோடு வெளியேறியது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் கஷ்டம்
தாலிபான் கொடுமைக்கு கீழ் வாழ விருப்பம் இன்றி ஆப்கானிஸ்தான் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். அங்கு இருந்து காபூல் விமான நிலையம் வழியாக மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக பறந்து வருகிறார்கள். முக்கியமாக ஆசியாவை தவிர்த்து பிற கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இவர்கள் சாரை சாரையாக பறந்து கொண்டு இருக்கிறார்கள். கனடாவில் இவர்களுக்கு அகதிகள் குடியுரிமை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் மக்கள் அந்த நாட்டுக்கு அதிகம் குடிபெயர்ந்து வருகிறார்கள். மக்கள் இப்படி அகதிகளாக வெளியேறும் நிலையில் அஷ்ரப் கானி பணம், நகைகளோடு வெளியேறியதாக வரும் செய்தி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications