வங்கதேச கரன்சி மாற்றம்.. முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்.. இந்து கோவில் சேர்ப்பு!
டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். இதன் தொடர்ச்சியாக வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் ஹசீனாவின் அப்பா முஜிபுர் ரஹ்மானின் போட்டோவை கரன்சியில் இருந்து நீக்க இடைக்கால அரசு புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு வெடித்த வன்முறையில் தாக்குதலுக்கு குறிவைக்கப்பட்ட இந்து கோவில் இடம்பெற செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

இவர் ஷேக் ஹசீனா மற்றும் நம் நாட்டுக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டவர். ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நெருக்கம் காட்டினார். ஆனால் முகமது யூனுஸ் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நட்பாக இருக்கிறார். நம் நாட்டை எதிர்க்கிறார். தற்போது வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விரைவில் நடைபெற உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக முகமது யூனுஸ் அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது வங்கதேசம் உருவாவதற்கு காரணமான முஜிபுர் ரஹ்மானின் போட்டோ ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த முஜிபுர் ரஹ்மான் யார் என்றால் ஷேக் ஹசீனாவின் தந்தை ஆவார்.
மேலும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக வங்கதேசம் இருந்தது. 1971ல் பாகிஸ்தான் ராணுவத்துடன் மோதி தனி நாடு பெற முயன்றனர். இந்த போராட்டத்தை முன்னெடுத்து நம் நாட்டின் ராணுவத்தின் உதவியுடன் வெற்றி பெற்றவர் தான் இந்த முஜிபுர் ரஹ்மான். இதனால் தான் அவர் வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
தற்போது முஜிபுர் ரஹ்மானின் அடையாளங்களை அழிக்கும் வகையில் முகமது யூனுஸ் அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தான் வங்கதேச கரன்சியில் இருந்து அவரது போட்டோக்கள் அகற்றப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் முஜிபுர் ரஹ்மானின் படங்கள் இல்லை.
இவற்றில், கலாசார மற்றும் வரலாற்று அடையாளங்களை பிரதிபலிக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளன. தினாஜ்பூரில் உள்ள 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த காந்தாஜி இந்து கோயிலும் அதில் உள்ளது. புதிய கரன்சிகள் 1000, 50 மற்றும் 20 ஆகிய மதிப்பில் வெளியிடப்பட உள்ளன. அதே சமயம் ஏற்கனவே உள்ள கரன்சி நோட்டுகளும் செல்லும்.












Click it and Unblock the Notifications