முகமது யூனுசுக்கு வந்த புது சிக்கல்.. பைடன் அரசில் மகளுக்கு முக்கிய பதவி.. ஆதாரங்களை அழிக்க திட்டம்
டாக்கா: நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வரும் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் புதிய சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. முகமது யூனுஸ் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மனைவி ஹிலாரி கிளின்டன் உடனான நட்பில் தனது மகள் மோனிகாவுக்கு ஜோ பைடன் அரசில் முக்கிய பதவியை பெற்று கொடுத்த விவகாரம் அவருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆதாரத்தை அழிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இந்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். நம் நாட்டுடன் முகமது யூனுஸ் தொடர்ந்து மோதி வருகிறார். தற்போது இருநாடுகள் இடையேயான உறவு மோசமாகி உள்ளது.

நம் நாட்டை தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் உள்ளவர்கள் சீண்டி வருகின்றனர். இந்நிலையில் தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்பால் தொடர்ந்து முகமது யூனுஸ் பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கி உள்ளார்.
முதற்கட்டமாக அமெரிக்காவின் நிதி உதவியில் வங்கதேசத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முகமது யூனுசுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் ஏற்கனவே பிரச்சனை என்பது உள்ளது.
அதாவது முகமது ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹிலாரி கிளின்டனுடன் நல்ல நட்பில் இருக்கிறார். ஹிலாரி கிளின்டனின் கணவரான பில் கிளின்டனுடன் அவர் நல்ல உறவில் உள்ளார். அதேபோல் அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா 2வது முறையாக பதவி வகித்த 2009 முதல்2013 காலத்தில் ஹிலாரி கிளின்டன், அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டார். அப்போது முகமது யூனுசுக்கு மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் கடனாக வழங்கப்பட்டது.
மேலும் 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து களமிறங்கினர். இதில் ஹிலாரி கிளின்டன் தோற்றார். டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த சமயத்தில் முகமது யூனுஸ், ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவாக செயல்பட்டார். ஹிலாரி கிளின்டனின் அறக்கட்டளைக்கு நன்கொடையை வாரி வழங்கினார். அதன்பிறகு அந்த தகவல்கள் மறைக்கப்பட்டது. இதுபற்றி டிரம்ப் விசாரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி முகமது யூனுஸின் மகள் மோனிகா யூனுஸ் அமெரிக்காவில் உள்ளார்.
பில் கிளின்டன், ஹிலாரி கிளின்டன் ஆதரவுடன் முகமது யூனுஸ், தனது மகளுக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் புதிய பதவியை பெற்று கொடுத்துள்ளார். அதாவது முகமது யூனுசின் மகள் மோனிகா யூனுஸ அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் அரசின் கலை மற்றும் மனிதநேயக் குழுவில் (PCAH) அங்கம் வகித்தார்.
இதுபற்றி நம் நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதையடுத்து அந்த இணையதளத்தை முடக்கும் பணியை வங்கதேசம் தொடங்கி உள்ளது. அதன்படி வங்கதேசம் உள்பட மேலும் சில நாடுகளில் இருந்து PCAH.gov இணையதளத்தை திறக்க முடியாத நிலை என்பது உருவாகி உள்ளது. இதன்மூலம் வங்கதேசத்தில் இருக்கும் தனது பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் முகமது யூனுஸ் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதாவது முகமது யூனுஸ் நல்லவர். கிராம வங்கிகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கடன் கொடுத்து பெரிய தொழிலதிபர்களாக மாற்றியவர் என்பதால் தான் அவரை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமித்தனர். தற்போது அவர் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், அவரது மனைவி ஹிலாரி கிளின்டன் ஆகியோரின் ஆதரவில் மகள் மோனிகாவுக்கு பைடன் அரசில் புதிய பதவியை வாங்கி கொடுத்தார் என்பது வங்கதேசத்துக்கு தெரிந்தால் அது அவர் மீது தவறான பார்வையை ஏற்படுத்தும். இதனால் தான் அந்த இணையதளத்தை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications