"மன்னிப்பு கேளுங்க".. பாகிஸ்தானை கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திய வங்கதேசம்.. இது தேவையா?
டாக்கா: ‛‛நீங்கள் செய்த தவறுக்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு எங்களுக்கு சேர வேண்டிய ரூ.4.52 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்க வேண்டும்'' என்று பாகிஸ்தானை அழைத்து வைத்து அவமானப்படுத்தி உள்ளது வங்கதேசம். பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான உறவு என்பது தொடர்ந்து மேம்பட்டு வந்த நிலையில் வங்கதேசத்தின் இந்த செயலால் பாகிஸ்தான் அதிருப்தியடைந்துள்ளது. இருநாடுகள் இடையே என்ன நடந்தது? வங்கதேசம் ஏன் பாகிஸ்தானை பொதுவெளியில் மன்னிப்பு கோர வலியுறுத்தியது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது வன்முறையானது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்தது. முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ளார்.

இந்த இடைக்கால அரசு என்பது நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. அதேவேளையில் பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 6 மாதத்தில் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு மோசமாகி உள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான உறவு என்பது தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் - வங்கதேசம் உறவு
வங்கதேசம் என்பது பாகிஸ்தானிடம் இருந்து தான் 1971ல் தனி நாடாக பிரிந்தது. இதற்கு நம் நாட்டு ராணுவம் தான் வங்கதேசத்துக்கு உதவியது. ஆனால் அதனை மறந்து வங்கதேச இடைக்கால அரசு நம்மிடம் மோதி வருகிறது. அதேவேளையில் துரோகம் இழைத்த பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வருகிறது.
முதற்கட்டமாக சமீபத்தில் வங்கதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்துக்கும் ராணுவ அதிகாரிகள் சென்று வந்தனர். வங்கதேசம் சுதந்திரம் அடைந்ததன் 54 ஆண்டுகளுக்கு பிறகு இது முதல் முறையாக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சியில் தான் நடந்தது.
பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்
இதன் அடுத்தக்கட்டமாக தான் பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் செயலாளர் அம்னா பலோச் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து அவர் பேசினார். அப்போது வங்கதேச வெளியுறவுத்துறை செயலாளர் முகமது ஜாஷிம் உதினுடன், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அம்னா பலோச் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை என்பது பாகிஸ்தான் - வங்கதேசம் வெளியுறவுத்துறைகளுக்கு இடையே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடுகள் இடையேயான உறவு பற்றி இருவரும் விவாதித்தனர். வரும் காலத்தில் இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர். அப்போது வங்கதேசத்துக்கு சேர வேண்டிய பணத்தை உடனடியாக பாகிஸ்தான் விடுவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
நிதி விடுவிக்க கோரிக்கை
அதாவது 1971ம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக வங்கதேசம் இருந்தது. அப்போது அது கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. பாகிஸ்தானிடம் இருந்து தனி நாடு கோரியபோது பாகிஸ்தான் வங்கதேசத்தை புறக்கணித்தது. 1970ல் புயல் தாக்குதலில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டது. அதற்கான நிவாரணம் பாகிஸ்தான் வழங்கவில்லை. மாறாக நிவாரணத்துக்காக பெரும் தொகை நன்கொடையாக வழங்கப்பட்டது.
இருப்பினும் 1971ல் தனிநாடாக பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் பிரிந்தது. இதையடுத்து அந்த நன்கொடை தொகையை பாகிஸ்தான் வழங்கவில்லை. அதுமட்டுமின்றி வங்கதேசத்துக்கு சேர வேண்டிய சில முக்கிய பங்குகளை பாகிஸ்தான் வழங்கவில்லை. இதை எல்லாவற்றையும் பாகிஸ்தான் இப்போது வங்கதேசத்துக்கு வழங்க வேண்டும். மொத்தம் 4.52 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மன்னிப்பு கோர சொல்வதன் பின்னணி
அதேபோல் பாகிஸ்தான் பொதுவெளியில் வங்கதேசத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது பாகிஸ்தான் அதிகாரியை அதிர்ச்சிக்குள்ளாகியது. இதை கேட்டதும் அவர் அதிர்ந்து போனார். அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. மேலும் பாகிஸ்தானை மன்னிப்பு கோர வேண்டும் என்று வங்கதேசம் வலியுறுத்துவதன் பின்னணியிலும் முக்கிய விஷயம் உள்ளது.
அதாவது கடந்த 1971ல் பாகிஸ்தானிடம் இருந்து தனிநாடு கோரி கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது வங்கதேசம்) வசிக்கும் மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனை பாகிஸ்தான் ஏற்கவில்லை. மேலும் போராட்டக்காரர்களை அவர்கள் ஒடுக்க நினைத்தன. இதற்காக பாகிஸ்தான் ராணுவம் களமிறக்கப்பட்டது.
படுகொலை - பலாத்காரம்
இந்த பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு,தடியடி நடத்தியது. மக்களை சித்ரவதை செய்தது. அப்போது பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமான பெண்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கொடூர செயலுக்கு இந்திய ராணுவம் முற்றுப்புள்ளி வைத்தது. கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்காக நம் நாட்டு ராணுவம் போர் புரிந்து பாகிஸ்தான் ராணுவத்தை சரணடைய வைத்தது. அதன்பிறகு தான் வங்கதேசம் உருவானது.
நீண்டகால கோரிக்கை
இப்படியான சூழலில் தனிநாடாக வங்கதேசம் வேண்டும் என்று போராடிய மக்களை கொன்று, பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த பாகிஸ்தான் ராணுவத்தின் செயலை இன்னும் அந்த மக்கள் மறக்கவில்லை. இந்த துரோகத்தை இழைத்த பாகிஸ்தான் அரசு வங்கதேசத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் என்பது அந்த நாட்டு மக்களின் நீண்டகால கோரிக்கை. அது இன்று வரை நடைபெறவில்லை. பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனால் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான உறவு என்பது இல்லாத நிலையில் இருந்தது. ஆனால் இப்போது பாகிஸ்தான் - வங்கதேசம் உறவு மேம்பட தொடங்கி உள்ள நிலையில் பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் அம்னா பலோச்சிடம் அதுபற்றி வங்கதேச வெளியுறவுத்துறை செயலாளர் முகமது ஜாஷிம் உதின் வலியுறுத்தி உள்ளார்.
வங்கதேசம் சொல்வது என்ன?
இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் முகமது ஜாஷீம் உதின் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ‛‛வங்கதேசம் -பாகிஸ்தான் இடையே வரலாற்று ரீதியாக பிரச்சனை உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் அதனை சரிசெய்ய வேண்டும். இதனை தான் வங்கதேசம் விரும்புகிறது.
வங்கதேசத்துடன் வரலாற்று பிரச்சனைகளை தீர்க்க பாகிஸ்தானுக்கு இதுதான் சரியான சமயம்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் வங்கதேசம் தனிநாடு போராட்டத்தின்போது பாகிஸ்தான் இழைத்த குற்றங்களுக்கு இப்போது மன்னிப்பு கேட்டு தனது வரலாற்று பிழையை சரிசெய்ய வேண்டும் என்று அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு சிக்கல்
இது பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதோடு வங்கதேசத்தின் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்கவில்லை. இப்படி கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திட்டீங்களே என பாகிஸ்தான் புலம்ப தொடங்கி உள்ளது.
இதற்கிடையே தான் விரைவில் வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இசாக் தார்செல்ல உள்ளார். அவர் ஏப்ரல் 27, 28 ஆகிய 2 நாட்கள் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போதைய வங்கதேசத்தின் இந்த கோரிக்கையால் அந்த பயணம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஒருவேளை இசாக் தார் வங்கதேசம் செல்லும்பட்சத்தில் 2012ம் ஆண்டுக்குபிறகு வங்கதேசம் செல்லும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெயரை பெறுவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications