முதல் முறையாக வாக்களித்த சவூதி பெண்களுக்கு இலவச "சவாரி" அளித்த உபேர் டாக்சி!
ரியாத்: சவூதி வரலாற்றிலேயே முதல் முறையாக இன்று பெண்கள் வாக்களித்தனர். நகராட்சித் தேர்தலில் வாக்களித்த பெண்களுக்கு வசதியாக உபேர் டாக்சி நிறுவனம் தனது கார்களில் இலவசமாக பெண்களுக்கு லிப்ட் கொடுத்தது.
பெண்களுக்கு கார் ஓட்ட சவூதி அரேபியாவில் அனுமதி கிடையாது என்பதால் வாக்களிக்க நீண்ட தூரம் போக வேண்டிய பெண்களுக்காக இந்த இலவச சேவையை உபேர் அளித்தது.
சவூதியில் முதல் முறையாக இன்று நடந்த தேர்தலில் பெண்கள் போட்டியிட்டனர், வாக்கும் அளித்தனர். இதனால் சவூதி அரேபியப் பெண்களுக்கு இன்றைய நாள் மிகவும் நெகிழ்ச்சியான நாளாக மாறியிருந்தது.

உற்சாகம்.. ஆர்வம்
இன்று வாக்களிக்கச் சென்ற பெண்களிடையே பெரும் உற்சாகமும், ஆர்வம் காணப்பட்டது. பலருக்கு இது திருவிழா உணர்வைக் கொடுத்தது. மிகுந்த சுதந்திரமாக உணர்வதாக பல பெண்கள் கூறினர்.

வாகனம் ஓட்ட முடியவில்லை
ஆனால் நீண்ட தூரம் சென்று வாக்களிப்பதில் பல பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டது. காரணம், அங்கு பெண்கள் வாகனங்களை ஓட்ட தடை உள்ளதால்.

கை கொடுத்த உபேர்
இந்த நிலையில்தான் உபேர் கால் டாக்சி நிறுவனம் கை கொடுத்தது. வாக்களிக்கச் செல்லும் பெண்களுக்கு வசதியாக இலவச சேவையை அது இன்று அளித்தது.

சவூதி முழுவதும்
இதுகுறித்து உபேர் நிறுவனத்தின் சவூதி செய்தித் தொடர்பாளர் ஷேடன் அப்தல்லத்தீப் கூறுகையில் முதல் முறையாக வாக்களிக்கச் செல்லும் பெண்கள் எங்களது டாக்சிகளை இலவசமாக இன்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

எங்கெங்கும் விழாக் கோலம்
முதல் முறையாக பெண்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து சவூதியில் ஆங்காங்கே வாக்களிப்பது எப்படி என்பதை விளக்கும் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ரேடியோ, டிவி போன்றவற்றிலும் விளக்கம் அளித்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் கொடி கட்டிப் பறந்தன.












Click it and Unblock the Notifications