“நெதன்யாகு குசும்புக்காரன்.. பதவியில் நீடிக்க, போருக்கு அடி போடுகிறார்!” பில் கிளிண்டன் எச்சரிக்கை
வாஷிங்டன்: வாழ்நாள் முழுவதும், தான் பிரதமர் பதவியில் நீடிப்பதற்காகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்பவும்தான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரானுடன் போருக்கு போகிறார். எனவே இந்த விஷயத்தில் அமெரிக்கா உஷாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் 'பில் கிளிண்டன்' எச்சரித்துள்ளார்.
கடந்த 17ம் தேதி, 'தி டெய்லி ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த பில் கிளிண்டன் இவ்வாறு கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "நெதன்யாகு தொடர்ந்து ஈரானுடன் சண்டையிட விரும்புகிறார். ஏனென்றால், அது அவர் பிரதமர் பதவியில் தொடர உதவும். ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் நெதன்யாகு பதவியில் இருந்துள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஆனால் அமெரிக்கா பதட்டத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். டிரம்ப் அதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன். அதிபர் பதவியில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். அதே நேரம் மத்திய கிழக்கில் உள்ள நமது நண்பர்களை நாம் நம்ப வைக்க வேண்டும், நாம் அவர்களுடன் துணை நிற்போம், அவர்களைப் பாதுகாக்க முயற்சிப்போம்.
ஆனால் அறிவிக்கப்படாத போர், மக்களை பாதிக்கும். அவர்கள் அரசியல் ரீதியாக போரில் ஈடுபடவில்லை. அவர்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். எனவே போர் சரியான தீர்வு அல்ல" என்று கூறியுள்ளார்.
பில் கிளிண்டன் சொல்வதில் உண்மை இருக்கிறது. இப்போது போர் நடப்பதால் நெதன்யாகு பல குற்றச்சாட்டுகளிலிருந்து நழுவி வருகிறார். அவர் மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கைத் துரோகம் என மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த வழக்குகள், 'வழக்கு 1000', 'வழக்கு 2000' மற்றும் 'வழக்கு 4000' என அறியப்படுகின்றன.
முதல் குற்றச்சாட்டு - 'வழக்கு 1000';
நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்னான் மில்ச்சன் மற்றும் ஆஸ்திரேலிய கோடீஸ்வரரான ஜேம்ஸ் பாக்கர் ஆகியோரிடமிருந்து சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சிகார், ஷாம்பெயின் மற்றும் நகைகள் போன்ற விலை உயர்ந்த பரிசுகளைப் பெற்றுள்ளனர் என்பது குற்றச்சாட்டு. இந்தப் பரிசுகளுக்கு ஈடாக, நெதன்யாகு மில்ச்சனுக்கு வரிச் சலுகைகள் மற்றும் விசா விவகாரங்களில் உதவ முயன்றதாக சொல்லப்படுகிறது.
இரண்டாவது குற்றச்சாட்டு - 'வழக்கு 2000';
இது மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் தொடர்புடையது. அதாவது நெதன்யாகு, இஸ்ரேலின் பிரபல நியூஸ் பேப்பரான 'யெடியோட் அஹரோனோட்' நாளிதழின் வெளியீட்டாளர் அர்னான் நோனி மோசெஸ் உடன் ஒரு 'சட்டவிரோத பேரம்' பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பேரத்தின்படி, நெதன்யாகு மோசெஸின் போட்டியாளரான 'இஸ்ரேல் ஹயோமுக்கு' எனும் நாளிதழுக்கு எதிராகச் செயல்படுவார். அதற்கு ஈடாக 'யெடியோட் அஹரோனோட்டில்' பேப்பரில் நெதன்யாகுவை புகழ்ந்து ஆஹா, ஓஹோ என்று எழுதப்பட வேண்டும். இந்த வழக்கும் விசாரணையில் இருக்கிறது.
மூன்றாவது குற்றச்சாட்டு - 'வழக்கு 4000';
இது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டாகக் கருதப்படுகிறது. நெதன்யாகு தகவல் தொடர்பு அமைச்சராகவும் பிரதமராகவும் இருந்தபோது, இஸ்ரேலின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான 'பெசேக்கின்' முதன்மை பங்குதாரர் 'ஷால் எலோவிச்சுக்கு' சாதகமாக ஒழுங்குமுறை முடிவுகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஈடாக, எலோவிச்சின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி இணையதளமான 'வால்லா நியூஸ்' நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சாதகமான செய்திகளை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், நெதன்யாகு பிரதமர் பதவியில் இருப்பதால் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து வருகிறார்.
இஸ்ரேலிய சட்டத்தின்படி, பிரதமராக இருப்பவர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால், அவர் மீது வழக்குத் தொடரலாம். ஆனால், அவருக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன. உதாரணமாக, பிரதமர் பதவியில் இருக்கும்போது கைது செய்யப்பட மாட்டார். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
ஆனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்து அல்லது பதவி விலகுவதன் மூலம் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று பிரதமர் பதவியை இழந்தால், அவருக்கு இந்தச் சட்டப் பாதுகாப்புகள் இருக்காது. குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். மேலும் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், சிறைத்தண்டனை மற்றும் அபராதம் போன்ற தண்டனைகளை அனுபவிக்க நேரிடும்.
எனவே இதற்கு பயந்துதான், ஈரானுடன் அவர் போருக்கு போகிறார். போர் என்று வந்துவிட்டால் மக்கள் பழைய விஷயங்களை மறந்து, நாட்டின் தலைவருடன் அணி திரள்வார்கள். இது உளவியல் உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications