இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட திருத்தம், அமெரிக்க செனட்டில் தோல்வி
வாஷிங்டன்: பாதுகாப்பு துறையில், இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் அமெரிக்க செனட்டில் தோல்வியை சந்தித்துள்ளது.
குடியரசு கட்சி உறுப்பினர் ஜான் மெக்கெயின் கொண்டுவந்த இந்த சட்டத் திருத்தத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. பாதுகாப்பு துறையில் இந்தியாவை பார்ட்னர் நாடாக அங்கீகரிக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்தது. அதேநேரம், இந்தியாவை முக்கிய பாதுகாப்பு துறை பார்ட்னராக மட்டும் அங்கீகரித்துக் கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த இந்திய பிரதமர் மோடியின் அழுத்தம் காரணமாக, இந்தியாவை உலகளாவிய பாதுகாப்புத்துறை கூட்டாளியாக மாற்றிக்கொள்ள ஜான் மெக்கெயின் இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார் என கூறப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் (என்டிஏஏ-17) என்ற இந்த சட்டத்திருத்தத்தை செனட் 85-13 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியது. ஆனால் அதில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட ஜான் மெக்கெயின் விரும்பிய மேலும் சில முக்கிய அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஜான் மெக்கெயின் கூறுகையில், சட்ட திருத்தம் முழுமையாக அங்கீகாரம் பெறவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். இந்தியா கடந்த இரு தசாப்தங்களாக அமெரிக்காவின் நட்பு நாடாக விளங்கிவருகிறது. அந்த நாட்டுக்கு உரிய அந்தஸ்தை வழங்குவது கட்டாயம் என்றார்.
அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றினார். அப்போது உலக ஜனநாயகத்தின் கோயில் அமெரிக்கா என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து கைதட்டியபடி மோடி பேச்சை கேட்டு ரசித்தனர் அமெரிக்க எம்.பிக்கள். பலமுறை எழுந்து நின்றும் அவர்கள் கரகோஷம் எழுப்பினர். மோடி தனது பேச்சின்போது காங்கிரஸ் கட்சியை கேலி செய்தது அமெரிக்க எம்.பிக்களிடையே குபீர் சிரிப்பை வரவழைத்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று அமெரிக்கா பாராட்டியது. இத்தனை அமளி துமளிக்கு பிறகு, ஒரே வாரத்தில், அதே அமெரிக்க எம்.பிக்கள் இந்தியாவுக்கு ஆதரவான ஒரு சட்ட திருத்தத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்துள்ளனர்.
மோடி பல ஆயிரம் கி.மீ பறந்து சென்று, தொண்டை தண்ணீர் வற்ற நாடாளுமன்றத்தில் உரையாற்றியும், அமெரிக்க எம்.பிக்கள் தங்கள் காரியத்தில் கரெக்டாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications