இடைக்கால அரசு அமைக்கப்படும்.. அவசர நிலை பிறப்பிக்கப்படாது.. வங்கதேச ராணுவ தளபதி மக்களுக்கு உரை
டாக்கா: ஷேக் ஹசீனா வங்கதேச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தற்போது மாணவர்கள், மக்கள் என அனைவரும் அமைதி காக்க வேண்டும். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைய ராணுவம் துணை நிற்கும் என்று வங்க தேச ராணுவ தளபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று வங்க தேசம். வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்தானது.

இந்த நிலையில் 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் மாணவர்கள்-போலீசார் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை களமாக மாறியது. இந்த வன்முறையில் சுமார் 200 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
வன்முறை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் சூழலை சமாளிக்க ராணுவம் களம் இறக்கப்பட்டது. இதற்கிடையே, இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக குறைத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு வன்முறை படிப்படியாக குறைந்து இயல்புநிலை திரும்ப தொடங்கியது.
இதனிடையே, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டதை கண்டித்து மீண்டும் ஒரு போராட்டம் வெடித்தது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போரட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதையடுத்து மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால், பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தற்போது பிரதமர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், வங்க தேச ராணுவ தளபதி வாக்கர் நாட்டுமக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஷேக் ஹசீனா வங்கதேச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தற்போது மாணவர்கள், மக்கள் என அனைவரும் அமைதி காக்க வேண்டும். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைய ராணுவம் துணை நிற்கும்.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை நடத்துவோம். போராட்டக்காரர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும். கலவரங்களால் பலரும் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு ராணுவ தளபதி பேசினார்.












Click it and Unblock the Notifications