அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் சிக்கல்.. 75% இந்தியர்களின் விசா நிராகரிப்பு! என்ன தான் பிரச்சனை
ஒட்டாவா: அமெரிக்கா கடந்த சில மாதங்களாகவே இந்தியர்களுக்கு விசா கொடுப்பதில் கெடுபிடி காட்டி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவும் இப்போது இந்தியர்களின் விசாக்களை அதிகளவில் நிராகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்தாண்டு இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களில் சுமார் 4ல் 3 பங்கை கனடா நிராகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு அவர் குடியேற்றம் சார்ந்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதனால் இந்தியர்கள் அமெரிக்கா செல்வதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. இந்தியர்கள் விசா கோரி விண்ணப்பித்தாலும் கூட பல்வேறு காரணங்களைச் சொல்லி விசா நிராகரிப்பு என்பது தொடர்கதையாகவே இருக்கிறது.

கனடா
இதற்கிடையே அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் சிக்கலை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அங்கு இந்தியர்களின் மாணவர் விசா விண்ணப்பங்கள் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச ரிஜக்ஷன்களை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பாகக் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான டேட்டா வெளியாகியுள்ளது.
விசா நிராகரிப்பு
அதில் கனடாவுக்கான இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களில் நான்கில் மூன்று பங்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2023ல் இதே ஆகஸ்ட் மாதம் விசா நிராகரிப்பு 32%ஆக இருந்த நிலையில், இப்போது அது 74% நிராகரிப்பு விகிதமாக அதிகரித்துள்ளது.
கனடாவில் சர்வதேச மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் சராசரியாக 40% நிராகரிக்கப்படுகிறது. அதிலும் சீன மாணவர்களின் விசா விண்ணப்பங்களில் வெறும் 24% மட்டுமே நிராகரிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் மட்டும் இவ்வளவு அதிகளவில் நிராகரிக்கப்படுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறைவு
மேலும், கனடாவுக்குச் செல்ல விசா கோரி விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கூட கணிசமாகச் சரிந்துள்ளது. கடந்த 2023ல் சுமார் 20,900 இந்திய மாணவர்கள் கனடா செல்ல விசா கோரி விண்ணப்பித்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் அது 4,515ஆக குறைந்துள்ளது. விசா கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை குறைந்த போதிலும், இந்தியர்களின் விசா நிராகரிக்கப்படுவது அதிகமாகவே இருக்கிறது.
என்ன காரணம்
இந்தியா கனடா இடையே கடந்த சில ஆண்டுகளாக நிலவும் பதற்றமான சூழலும் கூட இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு கனடாவில் இருந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். அதற்கு இந்தியா தான் காரணம் என அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டினார். இதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனால் இரு நாடுகளின் உறவும் மோசமடைந்தது. இப்போது ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மார்க் கார்னி கனடா பிரதமராகப் பதவியேற்றார். இருப்பினும், இன்னும் நிலைமை முழுமையாகச் சரியாகவில்லை. இதுவும் கூட விசா விண்ணப்பங்கள் குறைய முக்கிய காரணமாக இருக்கிறது.
போலி விண்ணப்பம்?
இந்தியர்கள் அதிகம் செல்லும் வெளிநாடுகளில் ஒன்றாக கனடா இருக்கிறது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் கனடா செல்கிறார்கள். இருப்பினும், அங்கு இந்தியர்கள் சிலர் போலியான கல்லூரி அனுமதி சர்டிபிகேட் மூலம் சென்று அங்கு வேலை செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக டிரக் டிரைவராக வேலை செய்ய ஒவ்வொரு ஆண்டும் பல நூறு இந்தியர்கள் அங்குச் செல்வதாகப் புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications