சீனாவில் கரண்ட் கம்பியில் ஊர்ந்த பாம்பு.. கிட்ட போய் பார்த்தால் வேற லெவல்! சீனாக்காரன் மூளையே மூளை
பெய்ஜிங்: சீனாவின் யுனான் மாகாணம் குன்மிங் பகுதியில் மின்கம்பிகளில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது போல தெரிகிறது.. கிட்ட போய் பார்த்தால் அது பாம்பு கிடையாது.. பாம்பு போல ஊர்ந்து சென்று பழுதுகளை கண்டறியும் ரோபோ ஆகும்.. மின்கம்பியில் இருக்கும் தடைகளையும் தாண்டிச் செல்லும் வகையில் இதன் உடல் நெகிழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு ரோபோதான் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
சீனாவில், மின்கம்பியைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு, பாம்பு போல வளைந்து நெளிந்து கம்பியின் மீதே நகரும் வகையில் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பயன்பாட்டில் உள்ள இந்த ரோபோவின் தலையில் கேமராவும், பல்வேறு சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கரண்ட் கம்பியில் ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா, பாகங்கள் ஏதாவது தேய்ந்து போயுள்ளதா, கம்பியில் வழக்கத்துக்கு மாறாக அதிக வெப்பம் இருக்கிறதா என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடியும். அதாவது, கம்பியில் பழுது ஏற்பட்டு பெரிய பிரச்சினை வருவதற்கு முன்பேயே அதை கண்டுபிடிக்க இந்த ரோபோ உதவும்.
இதுவரை இந்த ரோபோ 130 கிலோமீட்டருக்கும் அதிகமான மின் விநியோக கம்பிகளை ஆய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதர்கள் நேரடியாக சென்று செய்யும் ஆய்வை விட இது சுமார் 3 மடங்கு வேகமாக வேலை செய்கிறது.
இத்தகைய மின்கம்பிகளை ஆய்வு செய்ய பொதுவாக ட்ரோன்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன... ஆனாலும் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள இடங்களில் ட்ரோன்களைப் பயன்படுத்த முடியாது. அதேபோல மோசமான வானிலை, ட்ரோன்களின் பேட்டரி நேரம், அதிக மின்னழுத்தம் காரணமாக ஏற்படும் குறுக்கீடு போன்ற பிரச்சினைகளும் உள்ளன.
ஆனால் இந்த ரோபோவுக்கு அந்தப் பிரச்சினைகள் குறைவு. அது வானில் பறக்காமல், ஆய்வு செய்ய வேண்டிய மின்கம்பியிலேயே நேரடியாக ஊர்ந்து செல்கிறது. மனிதர்கள் செல்வது ஆபத்தான இடங்களுக்கும் இது செல்ல முடியும். மின்கம்பியில் இருந்தே நேரடியாக மின்சாரத்தை எடுத்துக்கொண்டு இயங்கும் வசதியும் இதில் உள்ளது. இதனால் நீண்ட நேரம் தொடர்ந்து கண்காணிக்க முடிகிறது.
சீனாவில் முக்கியமான தேர்வுகள் நடந்த காலகட்டத்தில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாம்பு போல கம்பியில் ஊர்ந்து செல்லும் இந்த ரோபோ, இனி மின்கம்பிகளை கண்காணிப்பதிலும், பழுதுகளை முன்கூட்டியே கண்டுபிடிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...!!


Click it and Unblock the Notifications
