சத்தம் போடாமல் உலக நாடுகளில் ஊடுறுவும் சீன ஆயுதங்கள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா
பெய்ஜிங்: சத்தமே போடாமல் படு வேகமாக உலக ஆயுத சந்தையில் சீனா தனி இடத்தைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
இதனால் அமெரிக்க ஆயுத வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளதாம். குறிப்பாக பல காலமாக அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி வரும் துருக்கி போன்ற நாடுகள் இப்போது சீனாவின் பக்கம் சாய ஆரம்பித்துள்ளால் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் கவலை அடைய ஆரம்பித்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் வாங்குவதை, துருக்கி குறைத்து விட்டதாம். தற்போது அது சீனாவின் ஆயுதங்கள் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளதாம்.

பாட்ரியாட்டைத் தூக்கிப் போட்ட துருக்கி
அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணையைத்தான் பல காலமாக நம்பியிருந்தது துருக்கி. ஆனால் தற்போது அது பேட்ரியாட்டை கைவிட்டுள்ளது. மாறாக, யாருக்குமே அவ்வளவாகத் தெரியாத சீனாவைச் சேர்ந்த சீன பிரிசிஷன் மெஷினெரி எக்ஸ்போர்ட் இம்போர்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடமிருந்து நீண்ட தூர ஏவுகணையை வாங்க அது ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்கா - ரஷ்யா அதிர்ச்சி
இத்தனைக்கும் ரஷ்யாவும், ஐரோப்பிய யூனியனும் தாங்கள் ஏவுகணைகளத் தருவதாக துருக்கியிடம் கோரியிருந்தன. ஆனால் அவர்களையும் நிராகரித்து விட்ட துருக்கி சீனாவிடம் போயிருப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

ரொம்பக் கஷ்டமாச்சே
காரணம் தற்போது துருக்கி வைத்துள்ள நேட்டோ பாதுகாப்பு சாதனங்களுடன், சீனாவின் இந்த எச்க்யூ 9 ஏவுகணையைப் பொருத்துவது சற்று கடினமானது. ஆனால் எப்படி இந்த முடிவை துருக்கி எடுத்தது என்பதுதான் அமெரிக்காவைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட நிறுவனம்
தற்போது துருக்கி ஏவுகணை வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கும் சீன பிரிசிஷன் நிறுவனத்திற்கு ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்துள்ளது. காரணம், இந்த நிறுவனத்தின் ஆயுதங்கள், ஈரான், சிரியா, வட கொரியாவுக்கு உதவக் கூடும் என்பதால் இந்தத் தடையை அது விதித்துள்ளது. அப்படிப்பட்ட நிறுவனத்திடம் துருக்கி போயிருப்பது அமெரிக்காவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

காசைக் குறைத்து சரக்கை விற்கும் சீனா
ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை முறியடிக்கும் வகையில், துருக்கிக்காக இந்த ஏவுகணைகளை 3 கோடி டாலருக்கு வழங்க சீனநிறுவனம் முன்வந்துள்ளதாம்.

உலக ஆயுத சந்தையைக் குறி வைக்கும் சீனா
துருக்கியின் முடிவு சீனாவுக்கு பெரும் குஷியைக் கொடுத்துள்ளதாம். காரணம், தனது ஆயுதங்களை உலக மயமாக்க அது துடித்துக் கொண்டிருக்கிறது. உலக ஆயுத சந்தையில் முன்னணி இடத்திற்கு வரவும் அது துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு துருக்கி ஒரு நல்ல வாய்ப்பாக அதற்குத் தெரிகிறது. அந்த வகையில் துருக்கியின் முடிவு, சீன ஆயுதஙக்ளுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

வளரும் நாடுகளுக்கு குறி
முன்பெல்லாம் சீனாவின் சிறிய ரக ஆயுதங்கள்தான் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது பெரிய ரக ஆயுதங்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றையும் அது விற்பனைக்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளது. குறிப்பாக வளரும் நாடுகளை அது இலக்காகக் கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவுக்கு நெருக்கடி
சீனாவின் ஆயுத விற்பனையானது, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் நெருக்கடியைத் தர ஆரம்பித்துள்ளதாம். காரணம், உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த நாடுகளிடமிருந்துதான் ஆயுதங்களை வாங்கி வருகின்றன. இதற்குள் சீனா புகுவது இவர்களைக் கவலைப்படுத்தியுள்ளது.

சீனாவின் பெரிய கஸ்டமர் பாகிஸ்தான்
தற்போது சீனாவிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை வாங்கும் நாடு பாகிஸ்தான்தான். பல காலமாகவே சீனாவிடமிருந்துதான் பல ரக ஆயுதங்களை வாங்கி வருகிறது பாகிஸ்தான்.

இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியது சீனா
ஆயுத விற்பனையில் தற்போது 5வது நாடாக உயர்ந்துள்ளது சீனா. இதற்கு முன்பு அது 8வது இடத்தில்தான் இருந்தது. தற்போது இங்கிலாந்தைக் கூட பின்னுக்குத் தள்ளியுள்ளது சீனா.

முதலிடத்தில் அமெரிக்கா
உலக ஆயுத விற்பனையில் அமெரிக்காதான் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஒட்டுமொத்த உலகஆயுத விற்பனையில் அதன் பங்கு மட்டும் 39 சதவீதமாகும்.












Click it and Unblock the Notifications