சுழலில் சிக்கும் சீனா.. ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள்? ஆய்வு நிறுவனங்கள் அனுப்பிய "வார்னிங்"
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் 22ம் தேதி அந்நாட்டில் 'சந்திர புத்தாண்டு' கொண்டாடப்பட இருக்கிறது. இந்த கொண்டாட்டங்களுக்கு மக்கள் தற்போது தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தையொட்டி கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது உலகம் முழுவதும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியது. இன்று வரையிலும் கூட உலக நாடுகள் இந்த தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா தொற்று முதன் முதலாக சீனாவின் வூஹான் மாகாணத்தில்தான் கண்டறியப்பட்டது. எனவே இந்த பாதிப்பை சீனாதான் பரவியது என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின.
அதேபோல சீனாவில்தான் முதியவர்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இதை இரண்டையும் கணக்கில் கொண்டு சீனா தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. அப்போது அந்நாட்டு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் 'பூஜ்ஜிய கோவிட்' கொள்கை. இந்த கொள்கையின் மூலம் கொரோனா தொற்று பாதிப்பு யாரேனும் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டால் அவர் தங்கியிருந்த பகுதி முழுவதும் அடைத்து சீல் வைக்கப்படும்.

உயிரிழப்பு
பின்னர் சுகாதார அதிகாரிகள் வந்து சோதனை செய்வார்கள். அந்த பகுதியில் வேறு யாருக்கேனும் தொற்று பாதிப்பு அறிகுறி தெரிந்தால் கூட அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த பகுதியில் ஹோட்டல்கள் தவிர வேறு எதுவும் திறந்திருக்காது. இந்த நடவடிக்கைகள் சீனாவுக்கு கை மேல் பலனளித்தது. அமெரிக்காவிலும், பிரேசிலிலும், இந்தியாவிலும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், சீனாவில் மட்டும் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே பதிவாகியிருந்தது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் பாதிப்படைய தொடங்கியது.

பொருளாதாரம்
குறிப்பாக சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் இதனை பொறுத்துக்கொள்ளாத மக்கள் போராட்டத்தில் குதித்தனர். மக்களின் போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே வேறு வழியின்றி சீனா தனது 'பூஜ்ஜிய கோவிட்' கொள்கையை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது. ஆனால் இதன் பின்னர்தான் ஆட்டம் தொடங்கியது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே பெங்ஜிங் போன்ற முக்கிய நகரங்களிலிருந்த மருந்து கடைகளில் சளி, காய்ச்சல் மாத்திரை மருந்துகள் திவாலாகின.

மருத்துவமனைகள்
மறுபுறம் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியது. இடம் பற்றாக்குறை காரணமாக வயதானவர்கள் பலர் மருத்துவமனைகளில் தரையில் இருந்தவாறே சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. உயிரிழப்புகளும் மளமளவென உயரத்தொடங்கின. கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி நிலவரப்படி சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் 11 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக உலகளாவிய சுகாதார நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Airfinity Ltd தெரிவித்திருந்தது. இந்நிலையில் சந்தி புத்தாண்டடையொட்டி இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 36,000 ஆக அதிகரிக்கும் என்று இந்நிறுவனம் கணித்திருக்கிறது.

பயணம்
மேலும், இதுவரை சீனாவில் மொத்தம் 6,08,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதனை சீன அரசு உறுதி செய்யவில்லை. சீனாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருவது உண்மைதான் என்றும் ஆனால் அது மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது எதிர்வரும் 22ம் தேதி நாடு முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயணம் மேற்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பயணித்த மக்கள் எண்ணிக்கையை விட 2 ஆண்டுகள் அதிகம். ஆனால் 2019ம் ஆண்டு பயணம் செய்தவர்களில் 200 கோடி என்பது 70 சதவிகிதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications