சீன ராணுவத்தில் கருப்பு ஆடு.. அணு ஆயுத விஷயத்தில் கோட்டை விட்ட தலைமை! கேம் ஆடும் அமெரிக்கா!
பெய்ஜிங்: சீன ராணுவத்தின் தலைமைத் தளபதி, ஜெனரல் சாங் யுக்ஸியா, நாட்டின் முக்கிய அணு ஆயுத ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்.
தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவர் மீது, அணு ஆயுதத் திட்டம் குறித்த தகவல்களை அமெரிக்காவிற்கு கசியவிட்டது, முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் பதவி உயர்வு உட்பட பதவி உயர்வுகளுக்காக லஞ்சம் பெற்றது என கடும் குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. ஜெனரல் சாங் யுக்ஸியா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து 'தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்' செய்தியை பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது.

என்ன பிரச்சனை?
ஜெனரல் சாங் யுக்ஸியா, அரசியல் குழுக்களை உருவாக்கியதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ராணுவ கொள்முதல் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகவும், பதவி உயர்வுகளுக்காக பெரும் லஞ்சம் பெற்றதாகவும் எழுந்த புகாரை விசாரிக்கையில், ஜெனரல் சாங் யுக்ஸியா சிக்கியிருக்கிறார். தற்போது இவர் தொடர்பான விஷயங்களை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு உத்தரவு
நேற்று உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டிருக்கிறது. சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சாங் மீது விசாரணையை அறிவித்திருக்கிறது. ஜெனரல் சாங் யுக்ஸியா, கட்சியின் ஒழுக்கம் மற்றும் அரசுச் சட்டங்களை மீறியதாகச் சந்தேகிக்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும் இது தொடர்பான எந்த விவரங்களையும் அமைச்சகம் பொது வெளியில் பகிரவில்லை.
குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது, சீனாவின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய தொழில்நுட்பத் தரவுகளை சாங் அமெரிக்காவிற்கு கசியவிட்டுள்ளார் என்பதுதான்.
வெளிவந்த உண்மை
சாங் மீதான சில ஆதாரங்கள், சைனா நேஷனல் நியூக்ளியர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கு ஜூன் மீதான விசாரணையிலிருந்து வந்தவை. கு ஜூன், சிவில் மற்றும் ராணுவ அணு திட்டங்களை மேற்பார்வையிடும் அரசு நிறுவனத்தின் முன்னாள் தலைவர். அவர் கட்சி ஒழுக்கம் மற்றும் அரசுச் சட்டங்களை மீறியதாகக் கடந்த வாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டர்.
இந்த விசாரணை குறித்து சீன தூதரக செய்தித் தொடர்பாளர், லியு பெங்யு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஊழலை எதிர்த்துப் போராடுவதில் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான மற்றும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை இது வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications