"மொத்தம் 10 முறை.. " உளவு பலூன் விவகாரம்! சீனா சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கவனிக்கும் அமெரிக்கா
உளவு பலூன் விவகாரத்தில் அமெரிக்க மீது சீனா பரபர குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது.
பெய்ஜிங்: உளவு பலூன் விவகாரம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இப்போது மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.. இதற்கிடையே அமெரிக்கா மீது சீனா பரபர குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே சுமுகமான உறவு இல்லை. இரு பெரிய நாடுகளுக்கும் இடையே எப்போதும் பதற்றமான ஒரு சூழலே நிலவி வந்தது.
இதற்கிடையே சீன பலூன் அமெரிக்க வான்வழியில் நுழைந்ததும்.. அதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் சீனா இப்போது முக்கிய பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்கா சீனா
உலகின் இரு பெரும் பொருளாதாரங்களான அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது.. இது டிரம்ப் காலத்தில் உச்சமடைந்தது. அப்போது இரு நாடுகளும் மாறி மாறி வரியைப் போட்டு, வரி போரில் (tax war) கூட ஈடுபட்டனர்.. இதனால் இரு பெரும் நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு நிலைமை சற்று கட்டுக்குள் வந்தன. தேவையில்லாத வரிகளைப் போடவில்லை.

பயணம் ரத்து
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவும் மெல்லச் சீராகி வந்தது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூட சீனாவுக்கு அரசு முறை பயணமாகச் செல்லவிருந்தார். இந்தச் சூழலில் தான் இரு நாடுகளுக்கும் இடையே பலூன் காரணமாக மீண்டும் பிரச்சினை பூதாகரமானது. சீனாவின் உளவு பலூன் ஒன்று அமெரிக்க வான்வழியில் நுழைந்தது. சீனா அமெரிக்காவின் ராணுவ தளங்களை உளவு பார்க்கவே இதை அனுப்பியதாக அமெரிக்கா பரபர குற்றச்சாட்டை முன்வைத்து. மேலும், ஆண்டனி பிளிங்கன் தனது சீன பயணத்தை ரத்து செய்தார்.

புதிய குற்றச்சாட்டு
இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்த சீனா, அது வானிலை தொடர்பான பலூன் என்றும் தவறுதலாக அது அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டது என்றும் விளக்கமளித்தது. இதை ஏற்க மறுத்து அமெரிக்க ராணுவம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மோசமாகப் பாதிக்கும் என்று சீனா கூறியிருந்தது. இதற்கிடையே அமெரிக்கா மீது சீனாவும் இப்போது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது அமெரிக்கா தனது ராணுவ தளங்களை உளவு பார்க்கப் பல முறை தங்கள் நாட்டிற்குள் பலூனை அனுப்பியதாகச் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

மொத்தம் 10 முறை
அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 10 முறை இதுபோல அமெரிக்க பலூன்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகச் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாகச் சீன வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின், "கடந்த 2022 ஜனவரி முதல் 10 முறை அமெரிக்க பலூன்கள் சீன வான்வழியில் நுழைந்துள்ளது. அமெரிக்கா இதுபோல மற்ற நாடுகளின் வான்வெளியில் சட்டவிரோதமாக நுழைவது ஒன்றும் அவர்களுக்குப் புதிதானது இல்லை.

அமெரிக்காவிடம் கேளுங்கள்
கடந்த ஆண்டு முதல், அமெரிக்க பலூன்கள் சீன அதிகாரிகளின் அனுமதியின்றி 10 முறைக்கு மேல் சட்டவிரோதமாகச் சீன பகுதிகளுக்கு மேலே பறந்துள்ளன.. அமெரிக்காவின் உயரமான பலூன்கள் சட்டவிரோதமாகச் சீனாவின் வான்வெளிக்குள் நுழைவதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், நீங்கள் அமெரிக்காவிடம் கேளுங்கள்.. அவர்களே இதை ஒப்புக் கொள்வார்கள். உங்களுக்கும் விளக்கமாக இதைச் சொல்வார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவம்
அதேநேரம் இந்த பலூன்கள் அமெரிக்க ராணுவம் அனுப்பியதா அல்லது உளவு பார்க்க அனுப்பியதா என்பது குறித்து எதையும் வாங் வென்பின் விளக்கவில்லை.. சீனா இதுபோன்ற ஊடுருவல்களுக்கு எப்படிப் பதிலளித்தது என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "பொறுப்பாகவும் ப்ரொபஷனலாகவும்" என்று கூறி முடித்துக் கொண்டார். சீனாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு அமெரிக்கா உடனடியாக எந்தவொரு பதிலையும் தரவில்லை.












Click it and Unblock the Notifications