சீனாவிற்கு கூடுதலாக 100 சதவீதம் வரி.. டிரம்ப் எடுத்த புதிய யுக்தி.. காத்திருக்கும் ட்விஸ்ட்
பெய்ஜிங்: சீனா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுமே உலக வல்லரசுகள் ஆகும். இந்த இரண்டு நாடுகளுமே மாறி மாறி மிரட்டுகின்றன. சீனா தனது அரிய கனிம வளங்களை வைத்து அமெரிக்காவை மிரட்டுகிறது. அதேபோல் அமெரிக்கா, சீனாவிற்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக மிரட்டுகிறது.. இப்படி மாறி மாறி மிரட்டுவதற்கு காரணம்... உலக ஆதிக்கத்தைத் தக்க வைக்க அமெரிக்காவும், அதேபோல் உலக ஆதிக்கத்தை அடைய சீனாவும் முற்படுவதே அடிப்படை காரணம் ஆகும். இதனால் ஏற்பட போகும் சிக்கல் என்ன என்பதை பார்ப்போம்.
அமெரிக்காவை பொறுத்தவரை உலக அளவில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளவும், சீனாவின் எழுச்சியைத் தடுக்கவும் விரும்புகிறது. ஆனால் சீனாவை பொறுத்தவரை 2049-க்குள் உலகப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லரசாக மாற விரும்புகிறது. அமெரிக்காவின் ஆதிக்கத்தை நீக்கவும் விரும்புகிறது.

அமெரிக்கா சீனா மோதல்
இதை உணர்ந்து தான் அமெரிக்கா சீன இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது, சீன நிறுவனங்களுக்கு வர்த்தகத் தடை விதிப்பது போன்றவற்றை செய்கிறது. இதற்கு பதிலடியாக சீனா, அமெரிக்கப் பொருட்களுக்குப் பதிலுக்கு வரி விதிக்கவும், அரிதான கனிமங்கள் (Rare) மற்றும் குறிப்பிட்ட தொழில்நுட்ப ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்து வருகிறது.
வர்த்தக தடைகள்
இது ஒருபுறம் எனில், அமெரிக்கா செமிகண்டக்டர் சிப்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் சீனாவுக்குச் செல்வதைத் தடுக்கும் விதமாக ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. பதிலுக்கு சீனா, தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடைய முயற்சிக்கிறது, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவும் வர்த்தகத் தடைகள் விதிக்கிறது. இந்நிலையில் சீனாவை சீண்டும் வகையில் தைவான் பாதுகாப்புக்கு ஆதரவு தெரிவிப்பது, தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து கடற்படையை நிலைநிறுத்துவது போன்ற வேலைகளை அமெரிக்கா செய்து வருகிறது.பதிலுக்கு சீனா, தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்து, மீண்டும் இணைக்க முயற்சி செய்கிறது. அதுமட்டுமின்றி தென் சீனக் கடலின் பெரும்பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது.
விலைவாசி உயர்வு
இப்படி சீனா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுமே மாறி மாறி மிரட்டி வருவதால், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகள் உயர்ந்து, உலகளாவிய பணவீக்கம் ஏற்படுகிறது. தைவான், தென் சீனக் கடல் போன்ற பகுதிகளில் ராணுவ மோதல் அபாயம் அதிகமாகி உள்ளது. உலக நாடுகள் அமெரிக்கா அல்லது சீனா என ஏதாவது ஒரு தரப்பைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், உலகம் இரு துருவங்களாக பிரிவது நடக்கிறது. அதேபோல் தொழில்நுட்பங்கள், தரநிலைகள் மற்றும் இணையப் பாதுகாப்பு அமைப்புகள் என அனைத்தும் அமெரிக்கா தலைமையிலான பிரிவு மற்றும் சீனா தலைமையிலான பிரிவு எனப் பிளவுபடுகின்றன. இதனால் உலகளாவிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறைந்து வருகிறது.
இந்தியாவிற்கு கடுமையான அழுத்தம்
சீனா, அமெரிக்கா ஆகிய இரண்டு வல்லரசு நாடுகளின் மோதல் காரணமாக, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டு முடிவுகளை எடுப்பதில் கடுமையான அழுத்தமும், சவால்களும் ஏற்படுகிறது. இப்படித்தான் எங்கோ இரு நாடுகள் மீது இந்தியாவை பாதிக்கிறது.
டிரம்ப் பேட்டி
இது ஒருபுறம் எனில், அரிய வகை கனிமங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா விரிவுபடுத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா பாதிக்கப்படும் என்பதால், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபம் அடைந்துள்ளார். நவம்பர் 1-ந் தேதியில் இருந்து சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப் போவதாக (தற்போது 55 சதவீத வரி) மிரட்டினார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசுக்கு டிரம்ப் விருந்து அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறுகையில், "சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பதாக நான் கூறியது, ஏற்கனவே நல்ல பலன்களை அளித்திருக்கிறது. தற்போது, சீனா எங்களை மரியாதையாக நடத்துகிறது. பல நூறு கோடி டாலர்களை வரியாக அளித்துள்ளது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜின்பிங்கை சந்திக்க போகிறேன்
எங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால், 100 சதவீத வரி விதிப்பேன் என்று கூறினேன். எனவே சீனா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் உருவாகும் என்று நினைக்கிறேன். சீன அதிபர் ஜின்பிங்கை இம்மாதம் சந்திக்கப் போகிறேன். அப்போது சீனாவுடன் அற்புதமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கருதுகிறேன். அது மாபெரும் ஒப்பந்தமாக இருக்கும். இரு நாடுகளுக்கும், ஒட்டுமொத்த உலகத்துக்கும் அற்புதமாக இருக்கும்.
சீனாவை பணிய வைக்க முடியும்
சீனா எங்களை அரியவகை கனிமங்களை வைத்து மிரட்டியது. நான் வரிகளை வைத்து மிரட்டினேன். ஆனால் நேர்மையான ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ஜின்பிங்குடனான நல்லுறவு பேணுகிறேன். சீனாவுக்கு எதிராக பயன்படுத்த என்னிடம் வேறு வழிவகைகளும் இருக்கிறது. அவர்களது விமானங்களுக்கான பாகங்களை எங்களிடம் பெற முடியாது. நான் சீனாவிடம் நன்றாக இருக்க விரும்புகிறேன். ஜின்பிங்குடனான உறவை நேசிக்கிறேன். தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும் என்று நான் நினைக்கவில்லை" இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications