மக்கள் தொகை வீழ்ச்சியால் சீனாவுக்கு கஷ்டம்? இந்தியாவுக்கும் வரப்போகுது அதே பிரச்சினை
பெய்ஜிங்: நமது அண்டை நாடான சீனா உலகிலேயே இரண்டாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாடு. பொருளாதார ரீதியாகவும் கூட அமெரிக்காவுக்குப் பிறகு சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்படி உலகையே ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவில், இப்போது மிக பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது உலகின் மற்ற வல்லரசு நாடுகளுக்குக் கூட ஏற்படலாம். இந்தியாவும் விதிவிலக்கு இல்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய நாடு சீனா.. கடந்த 50 ஆண்டுகளில் உலகிலேயே மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்த நாடு சீனா என்று நாம் துணிச்சலாகவே சொல்லலாம்.

மக்கள்தொகை சரிவு: பரப்பளவு அடிப்படையில் உலகிலேயே 4வது பெரிய நாடாக இருக்கும் சீனா, மக்கள்தொகை மற்றும் பொருளாதார அடிப்படையில் இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ராணுவத்திலும் கூட டாப் இடத்திலேயே உள்ளது. இப்படி பல்வேறு துறைகளிலும் சீனா ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் கூட கடந்த சில ஆண்டுகளாக இது புதிய பிரச்சினையைச் சந்தித்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளிலும் இதே பிரச்சினை தான். வரும் காலத்தில் இந்தியாவில் கூட இந்த சிக்கல் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள்தொகை அதிகரிப்பதே சீனாவின் மிகப் பெரிய சிக்கலாக இருந்தது. மக்கள் தொகை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த சீனா பல நடவடிக்கைகளை எடுத்தன. குறிப்பாக ஒரு குழந்தை பாலிசியை கடுமையாக நடைமுறைப்படுத்தியது. இதனால் அங்கு மக்கள்தொகை குறையவும் தொடங்கியது. ஆனால், இப்போது அதுவே சீனாவுக்கு பெரிய பிரச்சினையாகவும் மாறிவிட்டது.
மக்கள் தயக்கம்: அரசு பாலிசி ஒரு பக்கம் என்றால்.. அதைத் தாண்டி குழந்தைகளை வளர்க்கும் செலவு அதிகரித்ததால் சீன மக்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவே தயங்கினர். இதனால் மக்கள்தொகை எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாகச் சரிந்துள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்குச் சீனாவில் குறைந்துள்ள நிலையில், இதனால் அங்குள்ள பல கிண்டர் கார்டன் எனப்படும் மழலையர் பள்ளியில் மாணவர்களே இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
பள்ளிகள் மூடல்: இதனால் இந்தாண்டு மட்டும் அங்குப் பல ஆயிரம் மழலையர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்தாண்டு உடன் ஒப்பிடும் போது சீனாவில் 14,808 மழலையர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாம். மழலையர் பள்ளிகள் மட்டுமின்றி தொடக்கப் பள்ளிகளும் கடந்த ஓரே ஆண்டில் 5645 மூடப்பட்டுள்ளன. இது வரும் காலங்களிலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் உள்ள இளம் தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றெடுக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
குழந்தைகள் மக்கள்தொகை குறைவது ஒரு பக்கம் என்றால் முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பது மற்றொரு பிரச்சினையாக வெடித்துள்ளது. ஒரு நாட்டில் இளைஞர்கள் மக்கள் தொகை அதிகமாக இருந்தால் மட்டுமே பொருளாதாரம் உயரும். இல்லையென்றால் அது பொருளாதாரத்தையே பாதிக்கும். ஜப்பானில் ஏற்கனவே இந்த பிரச்சினை தொடங்கிவிட்டது. அமெரிக்கா, தென்கொரியாவும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருக்கிறது.
இந்தியாவுக்கும் ஏற்படலாம்: சீனாவில் இப்போது அந்த பிரச்சினையைத் தான் எதிர்கொண்டு இருக்கிறது. சீனா என்ன தான் ஒரு குழந்தை பாலிசியை கைவிட்டு விட்டாலும், குழந்தைகளைப் பராமரிக்க ஆகும் செலவுக்கே பயந்தே பல தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது இல்லை. அது சரியாகாத வரை சீனாவின் இந்த பிரச்சினை முடிவுக்கு வராது. சீனா மட்டுமின்றி வரும் காலத்தில் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த பிரச்சினை வரலாம் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications