17 ஃபேசஸ் ஆஃப் ஆக்ஷன் பத்தி தெரியுமா? சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடும் பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது COP28 மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் உடன் இணைந்த ஒரு எழுச்சியூட்டும் நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தையும், போற்றுதலையும் ஈர்த்து கொண்டுள்ளது. ஆம், "17 ஃபேசஸ் ஆஃப் ஆக்ஷன்" (17 Faces Of Action) சர்வதேச புகைப்பட கண்காட்சி பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம்.
இந்த கண்காட்சியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், நிலைத்தன்மையின் முன்னேற்ற இலக்குகளை அடைய உதவிய, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த 17 பெண்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகின் முக்கியமான பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.

ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகம், சுவிஸ் பெண்கள் அதிகாரமளிக்கும் சங்கம் (ASWE), பொது மகளிர் சங்கம் (GWU) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் இந்த புகைப்பட கண்காட்சி வரும் டிசம்பர் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது.
GWU-ன் பொதுச்செயலாளர் நூரா அல் சுவைடி, இந்த புகைப்பட கண்காட்சி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்க முயன்ற பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை இது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்த புகைப்பட கண்காட்சி நடைபெற காரணமாக இருந்த அமைப்புகளுக்கு இந்த தருணத்தில் அவர் நன்றியும் தெரிவித்து கொண்டுள்ளார்.
17 Faces Of Action ஆனது, 17 வெவ்வேறு நாடுகளில் 17 கண்காட்சிகளை உள்ளடக்கியது ஆகும். எந்த நாட்டில் நடைபெறுகிறதோ, அந்த நாட்டில் நிலைத்தன்மை முன்னேற்ற இலக்குகளை அடைய உதவிய பெண்களின் புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்படும். அஜர்பைஜான், உஸ்பெகிஸ்தான், போர்ச்சுகல், ஜார்ஜியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இந்த கண்காட்சி ஏற்கனவே நடத்தப்பட்டு விட்டது.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இறுதியாக 17 நாடுகளின் புகைப்படங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்படும். கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் வரும் 2024-ம் ஆண்டில் நிறைவடையவுள்ளது.
இந்த கண்காட்சியானது, பெண்களின் சாதனைகளை கொண்டாடுவது மட்டுமின்றி, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான சிறந்த உலகத்தை உறுதி செய்யும் பயன்படும். அத்துடன் நிலைத்தன்மையின் இலக்குகளை அடைய விரும்புவதில் தங்கள் பங்களிப்பை செய்ய விரும்பும் தனி நபர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் இந்த புகைப்பட கண்காட்சி அமைகிறது.












Click it and Unblock the Notifications