நான் அதிபருங்க....‘கைதி’ டிரஸ் போட மறுத்து மோர்சி கோர்ட்டில் கர்ஜனை
கெய்ரோ: நான் தான் எகிப்தின் சட்டப்பூர்வ அதிபர், ஆதலால் கைதி உடை அணிய முடியாது என கோர்ட்டில் தெரிவித்துள்ளார் பதவியிறக்கம் செய்யப் பட்ட அதிபர் மோர்சி.
வரம்பற்ற அதிகாரங்கள் மூலம் மக்களிடம் எதிர்ப்பைச் சம்பாதித்த அதிபர் மோர்சி, கடந்த ஜூலையில் ராணுவத்தால் பதவியிறக்கம் செய்யப் பட்டார். அதன் பின்னர் ரகசிய இடத்தில் காவலில் வைக்கப் பட்ட மோர்சி, நேற்று தான் முதன்முறையாக மக்கள் பார்வையில் பட்டார்.
விசாரணைக்காக கோர்ட் அழைத்து வரப்பட்ட அவரைக் காண மக்கள் திரண்டிருந்தனர்.

சட்டப்பூர்வ அதிபர்....
கடந்த 2011ம் ஆண்டு எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்நாட்டு அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட முகமது மோர்சி, அதன்பின் 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று எகிப்தின் சட்டப்பூர்வ அதிபரானார்.

புதிய சட்டங்கள்...
ஆட்சியில் அமர்ந்த பின்னர், முபாரக்கின் அரசியல் கட்டமைப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு தன்னிடம் வரம்பற்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டார். இந்த அதிகாரங்கள் மூலம் நீதித்துறையின் மேற்பார்வை அல்லது பரிசீலனை இல்லாமல் சட்டம் இயற்றத் தொடங்கினார் மோர்சி.

போராட்டம்...
அதனைத் தட்டிக்கேட்ட பத்திரிகையாளர்களும், வன்முறையற்ற ஆர்ப்பாட்டக்காரர்களும் தாக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர்.

பதவியிறக்கம்...
இத்தொடர் போராட்டங்களின் விளைவாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் தேதி எகிப்து ராணுவத்தால் மோர்சி பதவியிறக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து எகிப்து தலைமை நீதிபதி தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டது.

தடை...
பதவியிறக்கம் செய்யப்பட்ட மோர்சி யாருக்கும் தெரியாமல் ரகசிய இடத்தில் காவலில் வைக்கப்பட்டார். அவரது ஆதரவு இயக்கமான இஸ்லாமிய சகோதரத்துவம் தடை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மோர்சியின் ஆதரவாளர்களுக்கும், அரசுத் துருப்புகளுக்கும் இடையிலான மோதல்கள் குறைந்தபாடில்லை.

ஆர்ப்பாட்டம்....
கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது மாளிகைக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதாகவும் அது குறித்த விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது. மோர்சியுடன் மேலும் 14 பிரதிவாதிகள் இந்த விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

ஆதரவாளர்கள்....
நேற்று தொடங்கிய இந்த விசாரணையில் பங்கு பெறுவதற்காக கெய்ரோ கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார் மோர்சி. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பின்னர் முதன்முறையாக அவரது முகத்தை காண ஏராளமான ஆதரவாளர்கள் கோர்ட்டின் முன் குவிந்தனர்.

கர்ஜனை...
வழக்கமாக கைதிகளுக்கு அளிக்கப்படும் சீருடையை அணியாமல் 'சூட்' உடுத்தி வந்த அவர், 'நான் தான் முஹம்மது மோர்சி. எகிப்து குடியரசின் ஜனாதிபதி' என்று நீதிபதியை நோக்கி கம்பீரமாக கூறியுள்ளார்.

தேசத்துரோகச் செயல்...
மேலும், எனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆட்சி கவிழ்ப்பு என்பது தேசத் துரோக குற்றம். இந்த குற்றத்தை செய்தவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டபூர்வ அதிபரான எனது ஆட்சிக்கு எதிராக சதி செய்தவர்களை காப்பாற்ற நீதிமன்றம் முயற்சிக்க கூடாது' என வாதிட்டுள்ளார் மோர்சி.

நான் எகிப்தின் அதிபர்....
'கைதிகளுக்கான சீருடையை அணியாமல் கோர்ட் விசாரணையில் பங்கேற்க கூடாது' என்ற நீதிபதியின் அறிவுரைக்கு பதிலளித்த மோர்சி, 'அதிபராக இருக்கும் என்னால் கைதிகளுக்கான சீருடையை அணிய முடியாது' என மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கின் மறுவிசாரணையை வரும் ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.












Click it and Unblock the Notifications