உலக விளம்பர மார்க்கெட்டில் டோணிக்கு 9வது இடம்! ரொனால்டோ, மெஸ்சி, முர்ரேவை முந்தினார்
லண்டன்: விளம்பர சந்தையில் மிகுந்த டிமாண்ட் உள்ள விளையாட்டு வீரர்களில், உலக அளவில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலை லண்டன் ஸ்கூல் ஆப் மார்க்கெட்டிங் வெளியிட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களில் பிராண்ட் மதிப்பு, அவர்களின் தற்போதைய விளம்பர வருவாய், மொத்த வருவாயில் அவர்கள் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் பங்கு விழுக்காடு போன்றவற்றை ஆய்வு செய்த லண்டன் ஸ்கூல் கணக்கில் எடுத்து இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

பெடரர் முதலிடம்
உலகிலேயே அதிக மார்க்கெட் தேவை உள்ள விளையாட்டு வீரர் என்று ஸ்விட்சர்லாந்து நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் இப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

தோற்றாலும் அவரே
கோல்ப் வீரர் ஃபில் மிக்கெல்சன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்திலுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் தோல்வியுற்றிருந்தாலும், பெடரர் மார்க்கெட் மதிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம். பெடரர் 17 கிராண்ட் ஸ்லாம் சிங்கிள் பட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளவர்.

டிஜோகேவிச், நடால்
இப்பட்டியலில் டென்னிஸ் நட்சத்திரங்களே அதிக இடம் பிடித்துள்ளனர். அதற்கு உதாரணமாக, 7வது இடத்தில் நோவாக் டிஜோகோவிச் உள்ளார். இவர்தான் நடப்பு விம்பிள்டன் சிங்கிள் பட்டம் வென்றவர். மேலும் மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரர் ரபல் நடால் 8வது இடத்திலுள்ளார்.

வீராங்கனைகள்
ரஷ்யாவின் அழகு புயல் மரியா ஷரபோவா 12வது இடத்திலும், விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் சாம்பியன் செரினா வில்லியம்ஸ் 20வது இடத்திலும் உள்ளனர். முதல் இருபது இடங்களை பிடித்த பெண் வீரர்கள் என்ற பெருமையையும் இவர்கள் தட்டிச் சென்றனர்.

டாப் 20
முதல் 20 இடங்களிலுள்ள வீரர்கள் பெயர் வருமாறு: ரோஜர் பெடரர், டைகர் உட்ஸ், ஃபில் மிக்கெல்சன், லீப்ரோன் ஜேம்ஸ், கெவின் டரன்ட், ரோரி மெக்ல்ரோய், நோவாக் டிஜோகோவிச், ரபல் நடால், மகேந்திர சிங் டோணி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோபே ப்ரையான்ட், மரியா ஷரபோவா, லியோனல் மெஸ்சி, உசைன் போல்ட், நெய்மார், ஆன்ட்டி முர்ரே, கேய் நிஷிகோரி, டெர்ரிக் ரோஸ், பிலோய்ட் மேவெதர், செரினா வில்லியம்ஸ்.












Click it and Unblock the Notifications