வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஹசீனா.. இந்தியாவுக்குக் கிளம்பிய புதிய தலைவலி.. ஏன் தெரியுமா?
டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை பற்றி எரியும் நிலையில், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதற்கிடையே அங்கே ராணுவம் ஆட்சியை அமைத்துள்ளது. ஷேக் ஹசீனாவின் வெளியேற்றம் என்பது இந்தியாவுக்குப் பெரிய தலைவலியைத் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
வங்கதேசத்தில் கடந்த ஒரு மாதமாகவே இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வந்தன. அதாவது அங்கே சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்தே இந்த போராட்டங்கள் முதலில் தொடங்கின.

இந்த போராட்டங்கள் மெல்ல ஹசீனாவுக்கு எதிராகத் திரும்பிய நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோஷமும் அதிகரித்தது. கடந்த 2008 முதல் தொடர்ந்து நான்கு முறை தேர்தலில் வென்று பிரதமராக இருக்கும் ஹசீனாவுக்கு இந்த போராட்டம் அழுத்தத்தைக் கொடுத்தது.
போராட்டம்: வங்கதேச பிரதமராக அவர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தது. அதேநேரம் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை அவர் ஒடுக்கினார். இதுவே அவர் மீது மக்கள் கொந்தளிக்கக் காரணமாக இருந்தது. பொறுத்துப் பொறுத்து பார்த்த அந்நாட்டு மக்கள் ஒரு கட்டத்தில் வீதிகளில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். அதுவே வன்முறையாக மாறியது.
ஏற்கனவே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து வங்கதேசம் முழுமையாக மீளவில்லை. இந்தச் சூழலில் ஹசீனாவும் அந்நாட்டை விட்டு வெளியேறி இருப்பது வங்கதேசத்திற்குப் பெரிய சிக்கலையே தரும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு என்ன: மேலும், இந்தியாவும் இந்த பிராந்தியத்தில் தனது நம்பகமான கூட்டாளியை இழந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். கடந்த காலங்களில் ஹசீனா இந்தியாவுக்கு உற்ற நண்பராகவே இருந்துள்ளார். மேலும் வங்கதேசத்தில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வதில் அவர் இந்தியாவுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இரு நாட்டு உறவு மேம்பட்ட நிலையில், இதனால் வங்கதேசத்தில் பல்வேறு திட்டங்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது.
வங்கதேசத்தில் இப்போது வன்முறை வெடித்துள்ள நிலையில், நமது மத்திய அரசு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் நிலவும் வன்முறை என்பது அந்நாட்டின் உள்விவகாரம் என்று கூறியுள்ள நிலையில், இதன் மூலம் ஷேக் ஹசீனாவுக்கு மறைமுக ஆதரவை வழங்கியுள்ளது.
மேற்குலக நாடுகள்: அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான ஹசீனாவின் ஒடுக்குமுறை குறித்து மேற்குலக நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் பல முறை கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், ஹசீனா தனது சர்வாதிகார பாணியிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின. தேர்தல்களில் கூட முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன. இருப்பினும், இதை எல்லாம் தாண்டியும் கூட இந்தியா தொடர்ந்து ஹசீனாவுக்கு ஆதரவாகவே இருந்தது.
இப்போது ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், ராணுவம் ஆட்சியை அமைத்துள்ளது. இனி வங்கதேசம் இந்தியா உடன் என்ன மாதிரியான அணுகுமுறையை எடுக்கப் போகிறார்கள் என்பது முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் கடந்த காலங்களில், மற்ற கட்சிகள் அல்லது ராணுவம் ஆட்சி செய்த போது இந்தியா- வங்கதேச எல்லையில் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை இந்தியா சந்தித்தது.
தலைவலி: இப்போது மீண்டும் அங்கே ராணுவ ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்தியா மீண்டும் பல சிக்கல்களைச் சந்திக்கலாம்.. ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், வங்கதேசத்திலும் அதேபோன்ற சூழல் ஏற்பட்டால் அது இந்திய ராணுவத்திற்குச் சிக்கலாக மாறும். இதனால் அங்கே அமைதியின்மை ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications