"உனக்கு ஏன் இந்த வேலை.. இங்கிலீஷ் கூட தெரியல!" பாக். அமைச்சர் ஆசீப்பை வெளுத்த பாகிஸ்தான் பெண் எம்பி
இஸ்லாமாபாத்: கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த இந்தியா பாகிஸ்தான் மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் அமைச்சர்கள் தொடர்ந்து இந்தியா குறித்து பொய்யான தகவல்களைப் பரப்ப முயன்று அவமானப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையே ஆங்கிலம் தெரியவில்லை என்றால் சர்வதேச ஊடகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பை பாகிஸ்தான் எம்பி ஒருவர் சாடும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மோதல் நடந்து கொண்டிருந்த போது, இந்தியா மீது அத்துமீறித் தாக்கியது மட்டுமின்றி தொடர்ச்சியாகப் பொய்களையும் பாகிஸ்தான் பரப்பி வந்தது. சர்வதேச மீடியாக்களில் பேட்டியளித்த அந்நாட்டின் அமைச்சர்களே உண்மையை மறைத்து பொய்களைக் கூறினர். இருப்பினும், அதிலும் அவர்களால் வெல்ல முடியவில்லை.. சர்வதேச ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டுப் போனார்கள்.

கவாஜா ஆசிப்
அப்படித் தான் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சர்வதேச மீடியாக்களில் பேட்டி தருகிறேன் எனச் சொல்லிப் பல முறை அவமானப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஎன்என் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த போது, இந்தியப் போர் விமானங்களை பாகிஸ்தான் போர் விமானங்கள் வீழ்த்தியதாகக் குறிப்பிட்டார். அதற்கு சிஎன்என் நெறியாளர் ஆதாரம் கேட்டார். அதற்கு ஆசிப், "நீங்க சோஷியல் மீடியாவை பார்க்கல.. சோஷியல் மீடியா முழுக்க அது இருக்கே" என்று வினோதமான பதிலைக் கொடுத்தார்.
சோஷியல் மீடியா ஆதாரம்
சமூக வலைத்தளங்களை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அந்த ஊடகவியலாளர் சொல்லிவிடவே பதில் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்ட அமைச்சர் ஆசிப்.. அதேநேரம் அவர் சர்வதேச மீடியாக்களில் அவமானப்படுவது இது முதல்முறை இல்லை. தொடர்ச்சியாகப் பல முறை இதுபோல நடந்துள்ளது. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் டிரெண்டாது. அதில் நெட்டிசன் ஒருவர் பாகிஸ்தான் எம்பி ஒருவரே ஆசிப்பை சாடும் வீடியோவை பதிவிட்டிருந்தார்.
இங்கிலீஷ் கூட தெரியல
அதாவது இம்ரான் கானின் பிடிஐ கட்சி எம்பியான சர்தாஜ் குல் வஜீர் தான் ஆசிப்பை கடுமையாக விமர்சித்தார். அதாவது சர்தாஜ் குல் வஜீர், "உங்களுக்கு இங்கிலீஷ் தெரியவில்லை என்றால்.. உங்களால் ஒழுங்காகப் பதில் சொல்ல முடியாவிட்டால் சர்வதேச மீடியாக்களில் லைவ் ஷோவுக்கு செல்லாதீர்கள். அங்குப் போய் நாட்டை அவமானப்படுத்தாதீர்கள்" என்று அவர் கூறியிருந்தார்.
சர்தாஜ் குல் வஜீரின் இந்தப் பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஆங்கிலம் என்பது வெறும் ஒரு மொழி தான்.. அது தெரிந்தால் அறிவு இருக்கிறது என அர்த்தம் இல்லை என்றாலும் சர்வதேச ஊடகத்தில் ஒரு நாட்டை பிரதிநிதித்துவம் படுத்தும்போது ஆங்கிலம் தெரிந்த ஒருவரே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்கப் பதில் வேறு ஒன்றாக இருக்கும். இது அந்த ஒட்டுமொத்த நாட்டையே அவமானப்படுத்துவதாகவே இருக்கும்.
முதல்முறை இல்லை
மேலும், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆசிப் லைவ் ஷோவில் உளறுவது இது முதல்முறை இல்லை. சில வாரங்களுக்கு முன்பு இதுபோல பிரிட்டன் ஸ்கை நியூஸிற்கு அவர் பேட்டியளித்திருந்தார். அந்த நேர்காணலில் தான் அவர் கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்ததை ஒப்புக்கொண்டார். அமெரிக்காவுக்காகச் சில மோசமான செயல்களைச் செய்து வந்ததாகவும் அது தவறுதான் என்றும் அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications