"இப்போ முடியலன்னா போர் எப்பவும் முடியாது.. இன்னும் லட்சம் பேர் சாவார்கள்” - டிரம்ப் பேச்சு!
வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக ரஷ்ய அதிபர் புதின் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் டிரம்ப்.
உக்ரைன் - ரஷ்யா இடையே 3 ஆண்டுகளைக் கடந்து இன்னும் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்தார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன் - அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று ஃப்ளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது பேசிய டிரம்ப், "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த முறை அமைதி விஷயத்தில் தீவிரமாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர் அப்படித்தான் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்கள் இருவருமே அப்படித்தான் என்று நினைக்கிறேன்.. அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். ஏராளமான மக்கள் உயிரிழந்துவிட்டனர். தற்போது இரு அதிபர்களும் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்.
நான் எட்டுப் போர்களுக்குத் தீர்வு கண்டுள்ளேன், இதுவே மிகவும் கடினமான ஒன்று. இன்று நாம் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தப் போகிறோம். இவரும் அவருடைய மக்களும் மிகவும் தைரியமானவர்கள்... சந்திப்புக்குப் பிறகு நான் அதிபர் புடினுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப் போகிறேன், நாங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வோம்..." என்றார்.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், "நாங்கள் பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இல்லையென்றால், இந்த சண்டை நீண்ட காலத்திற்கு நீடிக்கும். ஒன்று இது முடிவுக்கு வரும், அல்லது இது நீண்ட காலத்திற்குத் தொடரும், மேலும் லட்சக்கணக்கான கூடுதல் மக்கள் கொல்லப்படுவார்கள், அதை யாரும் விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.
ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், "உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனான எனது சந்திப்புக்கு முன்பு, ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு நல்ல மற்றும் மிகவும் பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications