என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள்
லண்டன்: உலகப்புகழ் பெற்ற போட்டோஷாப் உள்ளிட்ட பல்வேறு மல்டி மீடியா மென்பொருள்களை உருவாக்கும் நிறுவனமான அடோப் நிறுவன இயக்குநரே தன் மகனுக்கு வேலை கேட்டு லிங்க்டு-இன் தளத்தில் கோரிக்கை வைத்துள்ளார். அவர் மகன் கேம்பஸ் இன்டர்வியூவில் ஆஃபர் லெட்டர் பெற்றிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டுவிட்டது. கார்ப்பரேட் விதிகளால் தன் சொந்த நிறுவனத்தில் வேலை தர முடியாமல் தவித்த தந்தை, பொதுவெளியில் தன் மகனுக்காக பரிந்துரைகளை கேட்டுள்ளார். ஐடி உலகத்தில் அடோப் இயக்குனருக்கே இது தான் நிலைமையா என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

என்ன நடந்தது?
அடோபி நிறுவனத்தில் இயக்குநராக பணிபுரியும் சைலேஷ் மிஸ்ரா என்பவர், தனது மகனுக்கு வேலை தேடி லிங்க்டுஇன் (LinkedIn) தளத்தில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதுதான் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
ஏமாற்றம்
சைலேஷ் மிஸ்ராவின் மகன் தாப்பர் கல்லூரியில் கணினி பொறியியல் படித்து முடித்துள்ளார். அவருக்குக் கல்லூரி வளாக நேர்காணல் மூலம் ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அந்த நிறுவனம் திடீரென தனது முடிவை மாற்றி, மாணவர்களுக்குக் கொடுத்த வேலை வாய்ப்புக்கான ஆஃபர் லெட்டர்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டது .
உதவி கேட்ட தந்தை
இதனால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மென்பொருள் பொறியாளர் வேலை தேடி, தனது நெட்வொர்க்கில் உள்ளவர்களிடம் சைலேஷ் உதவி மற்றும் ரெஃபரல் கேட்டுள்ளார்.
மக்களின் கருத்து
இந்த விவகாரம் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்டதும், மக்கள் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். "நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் சாதாரண மக்களுக்கு மட்டும்தான் சட்டப்படி செல்லுபடியாகும் போல! ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் ஒப்பந்தத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்துவிடும்" என்று தற்போதைய வேலைச்சந்தையின் நிலையை ஒருவர் சாடியுள்ளார்.
"அடோபி போன்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக இருந்தும், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மகனுக்குப் பின்வாசல் வழியாக வேலை வாங்கித் தராமல், ஒரு சாதாரண இந்தியத் தந்தையைப் போல முறைப்படி வேலை தேடுகிறாரே!" என்று மற்றொருவர் அவரைப் பாராட்டியுள்ளார்.
"கணினி பொறியியல் என்பது பெரும்பாலும் ஹார்டுவேர் சம்பந்தப்பட்டதுதானே, அவர் ஏன் சாஃப்ட்வேர் (Software) வேலை தேடுகிறார்?" என்று ஒரு பயனர் குழப்பத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். (பொதுவாக கணினி பொறியியல் படிப்பில் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் இரண்டுமே சொல்லித் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது). எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒரு புதிய பட்டதாரி வேலை இழக்கும்போது, ஒரு தந்தையாகப் படும் கவலையும், அதற்கு அவர் நேர்மையான வழியில் தீர்வு தேடுவதும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.












Click it and Unblock the Notifications