கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒற்றை டோஸ்.. 80% வரை உயிர்களை பாதுகாக்கிறது.. அடித்துக் கூறும் பிரிட்டன்
பிரிட்டன்: கோவிஷீல்டு என்று இந்தியாவில் அழைக்கப்படும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்பு 80% குறைவதாகப் பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் மிகக் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளையே அனைத்து நாடுகளும் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா தடுப்பூசி
இருப்பினும், கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைப் பலரும் பரப்பி வருகின்றனர். மேலும், தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும் தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் எந்த பலனும் ஏற்படுவதில்லை என்றும் தொடர்ந்து இணையதளத்தில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வதால் உயிரிழப்புகள் எந்தளவு குறைந்துள்ளது என்பதைப் பிரிட்டன் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.

80% வரை குறைவு
அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியின் ஒரு டோஸை எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம் 80% குறைவதாகப் பிரிட்டன் நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல ஃபைசர் தடுப்பூசியின் ஒரு டோஸை எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம் 80 சதவிகிதமும், இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம் 97 சதவிகிதமும் குறைவதாகப் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகளைக் குறைக்கிறது
ஒருவர் கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பைசர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டால் அவர் உயிரிழக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாகத் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் பைசர் அல்லது அஸ்ட்ரா ஜெனேகா என எந்தத் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களை ஒப்பிடும்போதும் உயிரிழப்புகள் குறைவது தெளிவாகத் தெரிகிறது.

ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும்கூட, அது லேசான கொரோனா பாதிப்பாக மட்டுமே இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து விளக்கமளித்து வருகின்றனர். அதாவது தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக வேண்டிய நிலையும் அபாயமும் குறைவாகவே இருக்கும் என்பதே ஆய்வாளர்களின் கருத்து. அதையே தான் தற்போது இந்த ஆய்வு முடிவுகளும் உறுதி செய்கின்றன.

கோவிஷீல்டு தடுப்பூசி
ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்தத் தடுப்பூசியைத்தான் சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்கிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசியை விநியோகிப்பது சீரம் நிறுவனத்தின் பொறுப்பாகும்.












Click it and Unblock the Notifications