காசாவில் 1 பார்லே-ஜி பிஸ்கெட் பாக்கெட் விலை ரூ.2342! சர்க்கரை, காபி ரேட் கேட்டால் தலைசுற்றும்
டெல் அவிவ்: பல இந்திய வீடுகளில் அன்றாடம் காபி, டீயுடன் எடுத்துக்கொள்ளப்படும் பார்லே-ஜி பிஸ்கட்டுகள், குறைந்தபட்சம் ரூ.5-க்கு கிடைக்கும் ஒன்று. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில், இந்த பிஸ்கட்டுகள் சுமார் 500 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
சமீபத்தில் காசாவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், பார்லே-ஜி பிஸ்கட்டுகள் 24 யூரோக்களுக்கும் (சுமார் ரூ.2,342) அதிகமாக விற்கப்படுவதாக ஒரு நபர் கூறுகிறார். இது இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று ரஃபிஃபுக்கு பிடித்த பிஸ்கட்டுகள் கிடைத்தன. விலை 1.5 யூரோவில் இருந்து 24 யூரோக்களுக்கும் மேலாக உயர்ந்தாலும், ரஃபிஃபுக்கு பிடித்ததை மறுக்க முடியவில்லை" என்று அந்த வீடியோவில் ஒருவர் பேசியதை பார்க்க முடிந்தது.

உருவாக்கப்பட்ட பஞ்சம்
2023ம் ஆண்டு, அக்டோபர்-ல் நடந்த மோதல்களும், அதைத் தொடர்ந்து இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளும் காசாவில் உணவு கிடைப்பதைக் கடுமையாகக் குறைத்துள்ளன. மார்ச் 2 முதல் மே 19 வரை, முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதி முழுமையாகத் வெளியுலகிலிருந்து துண்டிக்கப்பட்டது. சர்வதேச அழுத்தத்திற்குப் பிறகுதான் ஒரு சில மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட்டன. இஸ்ரேலோ, ஹமாஸ் குழு, இந்த உதவிகளை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டுகிறது.
கள்ளச்சந்தையின் உண்மை நிலை
டாக்டர் அல்ஷாவா என்பவர் ஒரு பார்லே-ஜி பாக்கெட்டை சுமார் ரூ.240-க்கு வாங்கியதாகக் கூறினார். சில இடங்களில் ரூ.2,000-க்கும் அதிகமாக விற்கப்படுகின்றன. விற்பனையாளரைப் பொறுத்து இடத்திற்கு இடம் விலை மாறுபடுகிறது. இந்த பார்லே-ஜி பாக்கெட்டுகளில், 'EXPORT PACK' என்று எழுதப்பட்டு, எந்த விலையும் குறிப்பிடப்படவில்லை.
"மூன்று மாதங்களுக்கும் மேலாக எல்லைகள் மூடப்பட்டதால், 2 மில்லியன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத மிகக் குறைவான அடிப்படைத் தேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, உணவில் கொள்ளை நடக்கிறது," என்று டாக்டர் அல்ஷாவா என்பவர் என்டிடிவிக்கு தெரிவித்ததை பார்க்க முடிந்தது.
ஜூன் 6,நிலவரப்படி, வடக்கு காசாவில் சில அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய சந்தை விலைகளின் தோராயமான பட்டியல் (இந்திய ரூபாயில்):
- 1 கிலோ சர்க்கரை: ரூ.4,914
- 1 லிட்டர் சமையல் எண்ணெய்: ரூ.4,177
- 1 கிலோ உருளைக்கிழங்கு: ரூ.1,965
- 1 கிலோ வெங்காயம்: ரூ.4,423
- 1 கப் காபி: ரூ.1,800
பார்லே-ஜி ஏன் முக்கியம்?
பார்லே-ஜி வெறும் பிஸ்கட் அல்ல. அது காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு ஏக்கமான நினைவாகும். 1938-ல் தொடங்கப்பட்ட இந்தப் பிஸ்கட், இந்தியாவின் சுதேசி இயக்கத்தின் போது, பிரிட்டிஷ் தின்பண்டங்களுக்கு மாற்றாக உருவானது. இது ஒரு தேசிய சமத்துவமான, அனைவரும் வாங்கக்கூடிய பிஸ்கட் ஆக மாறியது.
பத்தாண்டுகளாக, பார்லே-ஜி தனது குறைந்த விலையைப் பராமரித்து வருகிறது. 'சுருங்குதல்' (shrinkflation) என்ற பொருளாதார முறை மூலம், எடையைக் குறைத்து விலையை அப்படியே வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் 100 கிராம் இருந்த ரூ.5 பாக்கெட் இப்போது சுமார் 55 கிராம் உள்ளது. 2013-ல், பார்லே-ஜி ரூ.5,000 கோடி விற்பனையை எட்டிய முதல் இந்திய FMCG பிராண்ட் ஆனது. 2011-க்குள், நில்சன் தரவுகளின்படி, இது உலகின் அதிக விற்பனையான பிஸ்கட் ஆக இருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு பார்லே ஜி பசியாற்றியது. காசாவிலும் இது பசிபோக்கி வருகிறது. ஆனால் காஸ்ட்லியாக.













Click it and Unblock the Notifications