வீடு வீடாக துப்பாக்கி சூடு.. சாலை முழுக்க சடலங்கள்.. மரண ஓலத்திற்கு நடுவே இஸ்ரேல்! கதறும் பொதுமக்கள்
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் படையினர் உடனான மோதல் தொடரும் நிலையில், அங்குச் சாலை முழுக்க உடல்கள் சிதறி கிடைப்பதாகப் பொதுமக்கள் அதிர்ச்சி தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் நேற்றைய தினம் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படையினர் திடீரென தாக்குதலை நடத்தினர். அதிகாலையில் 6.30 மணிக்குத் தாக்குதலைத் தொடங்கிய அவர்கள், அடுத்த 20 நிமிடத்தில் 5000 ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தினர்.
இதில் இஸ்ரேல் முற்றிலுமாக திக்கு முக்காடிபோனது. ஏனென்றால் அதிகாலை நேரத்தில் ஹமாஸ் படையினரால் இவ்வளவு பெரிய ஒரு தாக்குதலை நடத்த முடியும் என்று இஸ்ரேல் துளியும் எதிர்பார்க்கவில்லை. சில நிமிடங்களில் இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதிகளில் ஏவுகணை மழை பொழிந்துள்ளனர்.

தெருக்களில் ரத்தம் தோய்ந்த உடல்கள், துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் படையினர் வீடு வீடாகத் தாக்குதல் நடத்தியது, இஸ்ரேல் நாட்டவர் காசாவுக்குக் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டது ஆகியவை இஸ்ரேலியர்களை அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலால் தெற்கு இஸ்ரேலில் நகரமான ஸ்டெரோட் நகர் முழுக்க உடல்கள் மற்றும் தோட்டாக்கள் சிதறி இருக்கிறது. அங்கு நகரில் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே 12 மணி நேரத்திற்கு மேலாக ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், "நான் தாக்குதல் ஆரம்பித்து முதல் வீட்டிலேயே முடங்கினேன்.. முதலில் ஏவுகணை சத்தம் காதை பிளந்தது. அடுத்து மாறி மாறி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறின. அப்போது வெளியே சென்று பார்த்தேன். எனது கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை.. பயங்கரவாதிகள், பொதுமக்கள் உடல்கள் சாலையில் கிடந்தன. கார்கள் வீதிகள் என அனைத்திலும் துப்பாக்கி குண்டுகள்தான்" என்றார்.
தாக்குதல் ஆரம்பித்த முதல் நாள் இரவு வரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், காசா பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்னும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.
வீடு வீடாகச் சென்று ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications