ஆட்டுக்கறி சாப்பிடும் விநாயகர்... ஆஸ்திரேலிய நிறுவனத்தின் விஷமத்தால் சர்ச்சை!
இந்துக் கடவுளான விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போல ஆஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்திற்கு இந்து மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Recommended Video

கேன்பெர்ரா : ஆஸ்திரேலியாவின் இறைச்சி நிறுவனம் ஒன்று இறைச்சி குறித்து வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இந்து மதக் கடவுளான விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருப்பதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் விற்பனை செய்யும் நிறுவனம் ஆட்டு இறைச்சி விளம்பரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் விருந்து நடக்கும் மேஜையில் விநாயகர், இயேசு, புத்தர், ஜுலியஸ் சீசர் என பலரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகின்றனர்.
அப்போது இறுதியில் இறைச்சி சாப்பிடுவோம் என்று சொல்வது போல அந்த விளம்பரம் படமாக்கப்பட்டுள்ளது. சுமார் 2.09 நிமிடங்கள் ஓடும் இந்த விளம்பரத்தில் கடவுள்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர். இறுதியில் அனைவரும் ஒட்டுமொத்தக் குரலில் லேம்ப் சாப்பிடுவோம் என்று சொல்வது போல விளம்பரம் உள்ளது.
இந்து கவுன்சில் கண்டனம்
இந்து கடவுள் விநாயகரை அவமதிப்பதாக விளம்பரம் உள்ளது என ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆஸ்திரேலிய இந்து கவுன்சில் முகநூல் பக்கத்தில் தன்னடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதில் ஆஸ்திரேலிய இறைச்சி மற்றும் லைவ்ஸ்டாக் நிறுவனம் ஆட்டுக்கறி நுகர்வை விளம்பரப்படுத்துவதற்காக இந்துக் கடவுள் விநாயகரை பயன்படுத்தியிருக்கிறது.

ஆதாயத்திற்காக கொச்சைப்படுத்துவதா?
உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன, ஆஸ்திரேலியாவிலும் இந்து மதத்தினர் குறிப்பிட்ட காலத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர். ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக அனைத்து மதக் கடவுளையும் பயன்படுத்தி ஆதாயம் அடைய விரும்புகின்றனர்.

கடும் கண்டனம்
இது போன்ற விளம்பரங்களால் எழும் எதிர்ப்புகள் விளம்பரத்தை ஏற்படுத்தும், ஆனால் இந்த விஷயத்தில் நடக்காது என்றும், தேவையில்லாத இந்த விளம்பரம் நீக்கப்பட வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய இந்து கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பலரும் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புறக்கணிப்போம்
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கார்த்திக் அரசு என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சில நிமிட விளம்பரத்திற்காக மற்ற மதத்தினரின் நம்பிக்கை மதிக்கத் தவறி விட்டதாக அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் இது போன்று இந்துக் கடவுள்கள் தவறாக சித்தரிக்கப்படுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டுமானால் ஆட்டுக்கறியை புறக்கணிப்போம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications