இந்துக்கள் எல்லாருமே பணக்காரர்கள்! நன்கு படித்தவர்களாம்! வெளியான சர்வே முடிவுகள்! பிரிட்டனில்!
லண்டன்: பிரிட்டன் நாட்டில் இந்துக்களின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தொகை கணக்கீடு தகவல்களில் இருந்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்று செட்டிலாகி வருகின்றனர். குறிப்பாக இப்போதும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சென்று செட்டிலாகி வருகின்றனர்.
ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்களின் தேவை அங்கே இருப்பதால்.. இது போன்ற உலக நாடுகள் அவர்களை வரவேற்கவே செய்கிறது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

பிரிட்டன்
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் செட்டிலாகும் நபர்கள் பெரும்பாலானோர் இந்துக்களாகவே உள்ளனர். வெளிநாடுகளுக்குச் சென்றாலும் அவர்கள் இந்து மதத்தையே தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். இதனால் இந்துக்களின் மக்கள்தொகை வெளிநாடுகளில் கணிசமாக அதிகரித்தே வருகிறது. அதன்படி இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் இருக்கிறது. அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக இருக்கிறார்.

இந்துக்கள்
இதனிடையே பிரிட்டனில் மார்ச் 2021இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பல நூற்றாண்டுகளில் முதல்முறையாகப் பிரிட்டன் நாட்டில் கிறிஸ்துவர்களின் மக்கள் தொகை 50% கீழ் குறைந்துள்ளது. கடந்த 2011இல் பிரிட்டன் மக்கள்தொகையில் 59.3% பேர் கிறிஸ்துவர்கள் இருந்த நிலையில், இப்போது அது 46.2%ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் பிரிட்டனில் கிறிஸ்துவர்கள் மக்கள்தொகை குறைவது தெரிகிறது. இந்த மக்கள்தொகை கணக்கின் டேட்டாக்களை வைத்து வேறு பல துணை பிரிவுகளின் தகவல்களும் இப்போது வெளியாகி வருகிறது.

பணக்காரர்கள்
அதன்படி, சமீபத்திய கணக்கெடுப்பின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் மக்களில் மதங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, அங்கே இந்துக்கள் செல்வாக்காக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல அங்கே வசிக்கும் பெரும்பாலான சீக்கியர்கள் தங்களுக்குச் சொந்தமான வீடுகளை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கூறுகையில், "2021இல் இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்களில் 87% பேர் தாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சீக்கியர்கள்
ஒட்டுமொத்தமாகப் பிரிட்டனில் 82% பேர் நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிவித்த நிலையில், அதைவிட அங்கு வசிக்கும் இந்துக்களின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருக்கிறது. அதேபோல பிரிட்டன் ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் (33.8 சதவீதம்) ஒப்பிடும்போது, இந்துக்களில் 54.8% பேர் லெவல் 4 அல்லது அதற்கு மேலான கல்வித் தகுதியைப் பெற்றுள்ளனர். அதேபோல அங்கு வசிக்கும் சீக்கியர்கள் பெரும்பாலானோர், அதாவது 77.7% தங்கள் சொந்த வீடுகளில் தான் வசிக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள்
அதேபோல இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, முஸ்லிம் மக்கள் அதிக நெரிசலான வீடுகளில் வாழும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகமாகும். பிரிட்டனில் 16 முதல் 64 வயதானவர்களில் முஸ்லீம் மக்கள் தான் குறைந்தளவுக்கு வேலையில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அங்கே 70.9% வேலையில் இருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் 51.4 சதவீதம் பேர் மட்டுமே வேலையில் உள்ளனர். பெரும்பாலானோர் மாணவர்களாகவும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டி இருப்பதும் இதற்குக் காரணமாகும்.

பிரிட்டனில் இந்துக்கள்
பிரிட்டனில் கடந்த 2011இல் 1.5% இந்துக்கள் இருந்த நிலையில், இப்போது அது 1.7ஆக அதிகரித்துள்ளது. அதாவது பிரிட்டனில் 10 லட்சத்திற்கும் சற்று அதிகமான மக்கள் இந்துக்களாக உள்ளனர். அங்கு மூன்றாவது அதிகம் பின்பற்றப்படும் மதமாக இந்து மதம் உள்ளது. அடுத்து அங்கு சுமார் 5 லட்சம் பேர் சீக்கிய மதத்தையும், 2.72 லட்சம் பேர் பவுத்த மதத்தையும் 2.71 லட்சம் பேர் யூதர்களாகவும் உள்ளனர். மற்ற மதங்களைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 3.48 லட்சமாக உள்ளது.












Click it and Unblock the Notifications