41 வருட கனவு.. நாளை நிஜமாக போகிறது! விண்வெளி துறையில் சீனாவுக்கு சவால் விட தயாரானது இந்தியா!
வாஷிங்டன்: இந்தியாவை சேர்ந்த சுபான்சு சுக்லா எனும் விண்வெளி வீரர் நாளை சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கிறார். சுமார் 41 ஆண்டுகள் கழித்து இந்தியாவை சேர்ந்தவர் விண்வெளிக்கு செல்கிறார். இதன் மூலம் விண்வெளி துறையில் புதிய உச்சத்தை இந்தியா எட்டயிருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த 'ஆக்ஸியம்' எனும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாளை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புகிறது. மொத்தம் 4 பேர் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியரும் ஒருவராவார். இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்ஸியம் ஸ்பேஸ் என மூன்று விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் சேர்ந்து இந்த மிஷனை முன்னெடுத்திருக்கின்றன.

பயணத்தின் நோக்கம்:
இந்த திட்டம் மூலம், இந்தியா, அமெரிக்கா, போலந்து, மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்கள் 14 நாட்கள் அங்கு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். விண்வெளியில் உணவு எப்படி செரிமானம் ஆகிறது? ஊட்டச்சத்து எப்படி கடத்தப்படுகிறது? என்பது குறித்து பல அறிவியல் சோதனைகள் நடத்தி பார்க்கப்படும்.
இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்?
இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் இது ஒரு மைல்கல். காரணம் 41 ஆண்டுகளுக்கு பிறகு, நம் நாட்டை சேர்ந்தவர் விண்வெளிக்கு பறக்கிறார். இந்த நிகழ்வு இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உதாரணத்தோடு பார்க்கலாம்.
1960களின் கடைசி காலகட்டம் அது. விண்வெளி துறையில் ஏராளமான சாதனைகளை படைத்திருந்த சோவியத் ரஷ்யா, நிலவுக்கு ரோவர் ஒன்றை அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் அமெரிக்கா முந்திக்கொண்டு மனிதர்களை அனுப்பியது. அது மனிதகுல வரலாற்றில் அற்புதமான பணி. நான்கு கால்களில் நடந்த மனிதன், 2 கைகளையும் எப்படி உழைப்புக்காக பயன்படுத்தியது பரிணாம வளர்ச்சியில் முக்கியமான கட்டமோ, அதுபோல இந்த சம்பவம் நவீன பரிணாம வளர்ச்சியில் முக்கியமானதாக இருந்தது.
மனிதனால் சாதிக்க முடியாதது என்று எதுவும் கிடையாது என இதன் மூலம் உணர்த்தப்பட்டது. உலகம் முழுவதும் மாணவர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் மாதிரி ஆக வேண்டும் என கனவு கண்டனர்.
அதேபோன்ற ஒரு உணர்வு மாற்றத்தை நாளை இந்தியா சந்திக்க தயாராக இருக்கிறது. அந்த வகையில் 'ஆக்ஸியம்-4' மிஷன் இந்தியாவுக்கு முக்கியமானதாகும். புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து, நாளை காலை 5:52 மணிக்கு (இந்திய நேரப்படி) ஏவப்பட உள்ளது. இவர்களை SpaceX டிராகன் விண்கலம்தான் சுமந்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications