பற்றி எரியும் பாகிஸ்தான்.. எங்கு பார்த்தாலும் வன்முறை! பல இடங்களில் துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே ஒரு வித பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்குப் பல இடங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், அவர் இதுவரை கைதாவதைத் தவிர்த்தே வந்தார்.

இதற்கிடையே அவர் நேற்று வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அவரை பாகிஸ்தானின் துணை ராணுவ படையினர் கைது செய்தனர்.
கைது: இம்ரான் கான் காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டார்.. 70 வயதான இம்ரான் கான் கடந்தாண்டு வரை பாகிஸ்தானின் டாப் பதவியான பிரதமர் பதவியில் இருந்தவர். இப்போது அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-இன் டாப் தலைவர் மீது இம்ரான் கான் சமீபத்தில் பரபர குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அவர் இப்படிப் பேசிய ஒரே நாளில் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவருக்கு ஆதரவாக இப்போது பாகிஸ்தான் முழுக்க பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இந்த போராட்டம் தீவைப்பு மற்றும் கலவரத்தில் முடிந்துள்ளது.. இதுவரை கலவரத்தில் ஆறு பேர் இதில் உயிரிழந்துள்ளனர்.. குவெட்டா, பைசலாபாத், சக்தாரா ஸ்வாட், லாகூரில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு: பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையக நுழைவாயிலை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் நாடு முழுக்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் சில பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் கூட நடந்தது. இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பல இடங்களில் தீ வைத்தும் எரித்தனர். இதனால் ஒரு வித பதற்றமான சூழலே நிலவியது.

பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைந்து வரும் நிலையில், இம்ரான் கான் கைதை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் சட்டப்பூர்வமானது என்றே தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பிடிஐ தலைவருமான இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்து பாகிஸ்தான் ரேஞ்சர்களால் நேற்று கைது செய்யப்பட்டார்.
அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். மே 1ஆம் தேதி ராவல்பிண்டியில் தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் அவருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். அவரது கைது தொடர்ந்து ஆதரவாளர்கள் பெருந்திரளாகப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கே நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ராணுவ தலைமையகம்: பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு, வளாகத்திற்கு ராணுவ சின்னங்களை அடித்து நொறுக்கினர். மேலும், போராட்டக்காரர்கள் லாகூர் கான்ட்டில் உள்ள கார்ப்ஸ் கமாண்டரின் வீட்டிற்குள் நுழைந்து அவரது வீட்டிற்கு வெளியே இருந்த பொருட்களை தீ வைத்து எரித்தனர். மேலும், போலீஸ் தடுப்புகளைத் தூக்கி எறிந்து தீ வைத்தனர்.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, பிடிஐ கட்சியினர் கைபர் பக்துன்க்வா பகுதியிலும் போராட்டம் நடத்தினர். அங்கே கானின் ஆதரவாளர்கள் பெஷாவரில் உள்ள ரேடியோ பாகிஸ்தான் கட்டிடத்திற்கும் தீ வைத்தனர். கைபர் பக்துன்க்வாவில் உள்ள சிந்து நெடுஞ்சாலையை அவரது ஆதரவாளர்கள் டயர்களை எரித்தனர். மேலும், அங்குள்ள விமான படை தளத்திற்கும் வெளியேயும் போராட்டம் நடத்தினர்.

இந்தியா: இதனால் பாகிஸ்தான் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானின் நிலைமையை இந்திய ராணுவம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் கைதிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதை எதிர்த்து அவர்கள் கோர்டில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இருப்பினும், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான் கானை கைது செய்யப்பட்டதை சட்டப்பூர்வமானது என்றே தீர்ப்பளித்தது. இம்ரான் கான் கைதால் அங்கே ஒருவித பதற்றமான சூழலே நிலவுகிறது.












Click it and Unblock the Notifications