தலைக்குப்புற கவிழ்ந்த அமெரிக்க விமானம்.. ஆனாலும் உள்ளே இருந்த 80 பேருக்கும் எதுவும் ஆகல! அது எப்படி?
டொராண்டோ: கனடாவில் உள்ள டொராண்டோ ஏர்போர்ட்டில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. 80 பயணிகளைக் கொண்ட அந்த விமானம் தலைக்குப்புற கவிழ்ந்த போதிலும், அதில் யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. தலைக்குப்புற கவிழ்ந்தாலும் விமானத்தில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது எப்படி.. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக விமானங்கள் தான் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்தாகக் கருதப்படுகிறது. ஆனால், அதையும் தாண்டி சில நேரங்களில் விமானங்கள் விபத்துகளில் சிக்கும்.

விமான விபத்து
அப்படி தான் சமீபத்தில் அமெரிக்க விமானம் ஒன்று கனடாவில் விபத்தில் சிக்கியது. அதாவது அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள மின்னியாபோலிஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டெல்டா CRJ900 ரக விமானம் கனடாவின் டொராண்டோ பியர்சன் விமான நிலையத்திற்குச் சென்றது. உள்ளூர் நேரப்படி திங்கள் மாலை 3:30 மணியளவில் தரையிறங்கியது. அப்போது அங்கு வானிலை மிக மோசமாக இருந்த நிலையில், தரையிறங்கும் போது அது விபத்தில் சிக்கியது.
தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்
விமானம் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில், விமானமும் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். உள்ளே இருந்த 80 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 17 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விமானம் தலைகீழாகக் கவிழ்ந்த போதிலும் உயிரிழப்பு ஏற்படாதது பலருக்கும் ஆச்சரியத்தையே அளிப்பதாக இருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் இது குறித்து கேள்வியும் எழுப்பி வருகிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
விமானத்தின் இன்ஜினியரிங், அதன் சிறிய சைஸ் மற்றும் குறிப்பாக சீட் பெல்ட்கள் ஆகியவை தான் இந்த விபத்தில் அனைவரது உயிரையும் காப்பாற்றியதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். விமானம் விபத்துக்குள்ளாகும்போது அவை அப்படியே மோத வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தலை குப்புறக் கவிழ வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. ஆனால் அதீத காற்று வீசும் போது இதுபோல நடக்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அரிதான விபத்து
இது தொடர்பாக புளோரிடா ஏரோநாட்டிக்கல் பேராசிரியர் மைக் மெக்கார்மிக் கூறுகையில், "விமானம் தலைக்குப்புற கவிழ்வது அரிதானதுதான். ஆனால், நடக்கவே நடக்காது எனச் சொல்ல முடியாது. ஆனால், இதை எல்லாம் மனதில் வைத்தே விமானங்களை வடிவமைப்பார்கள். இதுபோன்ற சம்பவம் நடந்தாலும் அதைத் தாங்கி நிற்கும் வகையிலேயே விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழலில் விமானத்தின் வால் மற்றும் இறக்கைகள் தனியாக கட் ஆகும். அதேநேரம் உள்ளே இருக்கும் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே வடிவமைத்து இருப்பார்கள்.
விமானத்தின் உள்ளே இருக்கும் இருக்கைகள் புவியீர்ப்பு விசையை காட்டிலும் 16 அதிக விசையை கூட தாங்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இதனால் தான் விமானம் தலைகீழாகக் கவிழ்ந்த போதிலும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.
சீட் பெல்ட் முக்கியம்
அடுத்து முக்கியமானது சீட் பெல்ட்.. விமானத்தில் சீட் பெல்ட் எந்தளவுக்கு முக்கியமானது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம். அனைவரும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் தான் சிறு காயங்களுடன் அவர்கள் தப்பினர். சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அது மிக மோசமான விபத்தாக மாறியிருக்கும். அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை உள்ளே இருந்த பணிப் பெண்கள் உறுதி செய்தனர். இதுவே அனைவரும் உயிர் பிழைக்கக் காரணமாகும்" என்றார்.
இவை அனைத்தும் சேர்ந்தே உள்ளே இருந்த 80 பேரையும் பத்திரமாகக் காப்பாற்றியுள்ளது. அவர்களில் சிலருக்குச் சிறு சிறு காயங்கள் இருந்தாலும் அனைவரும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவுமே மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications