சிட்னி முற்றுகை: முஸ்லிம்களை பாதுகாக்க ஹேஷ்டேக் போட்ட ஆஸ்திரேலியர்கள்! நெகிழ்ச்சி நிகழ்வு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதியின் காபி கஃபே முற்றுகை தாக்குதலை தொடர்ந்து அந்த நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் உருவாகும் சூழ்நிலை நிலவியது. இதை முறியடிப்பதற்காக ஆஸ்திரேலிய மனித நேயர்கள் தொடங்கியுள்ள ஹேஷ்டேக் #illridewithyou இன்று உலக அளவில் டிவிட்டர் டிரெண்டாகியுள்ளது.
டிவிட்டரில் எத்தனையோ ஹாஷ்டேகுகள் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலும் சுயநலம் சார்ந்தவையாகவே அந்த ஹேஷ்டேக்குகள் இருக்கும். ஆம் ஆத்மி, பாஜக போன்றவை அரசியலுக்காகவும், அஜித், விஜய் ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களுக்காகவும்.... டிவிட்டர் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி சண்டை போட்டுக்கொள்வதை பார்த்துள்ளோம்.

ஆனால் நேற்று முதல் இன்றுவரை உலக டிரெண்டாக நீடிக்கும் ஒரு ஹேஷ்டேக் மனிதநேயத்தின் ஊற்றாக உருவெடுத்தது என்றால் மிகையல்ல.அந்த ஹேஷ்டேக் பெயர் illridewithyou என்பதாகும்.
சிட்னி நகரில் உள்ள கஃபேயில் துப்பாக்கி ஏந்திய நபர் பிணைக்கைதிகளை பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டிய செய்தி வெளியானதுமே ஆஸ்திரேலியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பிணைக்கைதிகளை மீட்பதற்கான பதற்றம் நிரம்பிய முயற்சிக்கு நடுவே, அந்த தீவிரவாதி ஈரானைச்சேர்ந்தவர் எனும் விவரம் வெளியானது. அவர் சர்வதேச தீவிரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் கொடியை கேட்டதாகவும் செய்தி வெளியானது.
இந்த தகவல்களால் ஆஸ்திரேலியாவில் வசித்த முஸ்லிம்கள் அச்சத்துக்கு உள்ளானார்கள். தீவிரவாதியின் மத அடையாளம் காரணமாக மக்களின் கோபம் தங்கள் மீது பாயலாம் எனும் எண்ணம் அவர்களை நடுக்கமடையச் செய்தது. அதிலும் இனவெறி தாக்குதல்களுக்கு பெயர்போன ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு சம்பவம் என்றால் கேட்கவா செய்ய வேண்டும். சத்தமாக பாட்டு வைத்து கேட்டதற்கே இந்திய மாணவர்களை புரட்டி எடுத்தவர்கள் ஆஸ்திரேலியர்கள். ஆஸ்திரேலியாவிலுள்ள இஸ்லாமிய அப்பாவி மக்களுக்கும், பெண்களுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் அச்சம் உச்சத்தில் இருந்தபோதுதான் டிவிட்டரில் உருவான இந்த ஹேஷ்டேக் அவர்களுக்கு ஆபத்பாண்டவராக வந்தது.
இந்த ஹேஷ்டேக்கை உருவாக்க காரணமாக இருந்தது ஒரு பேஸ்புக் பதிவாகும். ரச்சேல் ஜேகப்ஸ் எனும் பெண்மணி பேஸ்புக்கில் இப்படி பதிந்திருந்தார்: நான் ரயிலில் சென்று கொண்டிருந்த போது என் அருகே அமர்ந்திருந்த சக பெண் பயணி ஒருவர் மெதுவாக தனது பர்தாவை கழற்றி வைத்தார். அவருக்கு இருந்த தயக்கமும் அச்சமும் எனக்கு புரிந்தது. ரயில் நின்றதும் நான் அந்த பெண்ணிடம் ஓடிச்சென்று , பர்தாவை மீண்டும் அணிந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு துணையாக வருகிறேன் என்று கூறினேன். இதைக்கேட்ட அந்த பெண் நெகிழ்ந்து போய் அழுத படி என்னை கட்டிப்பிடித்தபடி ஒரு நிமிடம் இருந்துவிட்டு தனியே நடந்து சென்றார். இவ்வாறு பேஸ்புக்கில் ரச்சேல் பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவை படித்த டெஸ்ஸாகும் எனும் டிவிட்டர் பயனாளியின் மனது உருகியது. உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் ( @sirtessa) அவர், "பஸ்சில் நீங்கள் செல்வதாக இருந்தால், நீங்கள் மத ஆடையை அணிந்திருந்தால் , அதனால் பாதுகாப்பற்று உணர்ந்தால் நான் உங்களுடன் வருகிறேன் , சொல்லுங்கள் " என பதிவிட்டிருந்தார்.
கவலைப்படாதீர்கள் நான் உங்களுடன் வருகிறேன் எனச்சொல்லி முஸ்லிம்களுக்கு அவர் துணை நிற்க முயன்ற விதம் சக டிவிட்டர் பயனாளிகளின் ஆதரவையும் பெற்றது. பலர் அந்த பதிவை ரிடிவீட் செய்தனர். இதைப்பார்த்த ஊக்கம் பெற்ற டெஸ்ஸா, முஸ்லிம்கள் மனதில் எழக்கூடிய அச்சத்தை போக்கக்கூடிய வகையில் அவர்களுக்கு பக்கபலமாக நிற்க தயாராக இருப்பதை டிவிட்டர் மூலம் தெரிவிக்க ஏன் ஒரு ஹாஷ்டேகை உருவாக்க கூடாது என நினைத்து #illridewithyou ஹாஷ்டேகை உருவாக்கி பகிர்ந்து கொண்டார்.
உடனே நூற்றுக்கணக்கானோர் அதை ஏற்றுக்கொண்டு , பொது இடங்களில் தனியே செல்ல அஞ்சும் முஸ்லிமகளுடன் தாங்கள் துணைக்கு வர தயாராக இருப்பதை இந்த ஹாஷ்டேகுடன் டிவிட்டரில் தெரிவித்தனர். வெகு விரைவில் இப்படி ஆயிரக்கணக்கான குறும்பதிவுகள் குவிந்தன.
இரண்டு மணி நேரத்தில் இந்த ஹாஷ்டேக் 40,000 முறை பகிரப்பட்டது. அடுத்த 2 மணி நேரங்களில் 150,000 குறும்பதிவுகளை கடந்து டிவிட்டரில் ஒரு இயக்கமாக உருவானது. அடிலெய்டு, பிரிஸ்பேன் என பல நகரங்களிலுள்ள ஆஸ்திரேலியர்களும் தாங்கள் பயணிக்கும் பகுதியை குறிப்பிட்டு அங்கு எந்த முஸ்லிமாவது அச்சத்தோடு இருந்தால் என்னோடு வாருங்கள் என்று டிவிட் செய்ய தொடங்கினர்.
டிவிட்டரில் இப்படி ஒருமித்த குரலில் அனைவரும் ஆஸ்திரேலிய முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் தீவிரவாதத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்த செயலை மற்ற டிவிட்டர் பயனாளிகள் அங்கீகரித்து தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர். இந்த ஹேஷ்டேக் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இப்போது டிரெண்டாக ஓடிக்கொண்டுள்ளது. தீவிரவாதம் மூலம் மனிதத்தை துண்டாட நினைத்த நாசக்காரர்களுக்கு மனித குலம் அளித்த மகத்தான பதிலடிதான் இந்த ஒற்றுமை.












Click it and Unblock the Notifications