எங்கேயும், எப்போதும்... பால்ய சினேகிதர் பிராட்லியின் கட் அவுட்டுடன் வாழும் அமெரிக்க பெண்!
நியூயார்க்: காதலில் விழுந்தவர்கள் தங்கள் மனங்கவர்ந்தவர்களின் புகைப்படங்களைத் தங்கள் பர்சிலோ அல்லது படுக்கைக்கு அடியிலோ வைத்து ரசிப்பதை திரைப்படங்களிலும், சமயங்களில் நேரிலும் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண்மணி, தனது கணவரின் அனுமதியோடு தன் பால்ய சினேகிதரின் கட் அவுட்டுடன் வாழ்ந்து வருவதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?
இப்படி நடப்பது அமெரிக்காவில் தான். அந்த பால்ய நண்பர் நடிகர் பிராட்லி ஹூப்பர். அவரது தோழியின் பெயர் டானிலி டேவிஸ்.

மணமானவர்...
அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்தவர் 39 வயது டானிலி டேவிஸ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிராட்லி ஹூப்பர்...
இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த பிராட்லி ஹூப்பர், பின்னாளில் பிரபல நடிகராகி விட்டார். பிராட்லி ஹேங் ஓவர், சீரிஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ரொம்பவே மகிழ்ச்சி...
தனது கல்லூரித் தோழனாக இருந்த பிராட்லி பின்னாளில் ஹாலிவுட்டில் பெரிய ஹீரோவானதில் டானிலிக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாம். இதனால், பிராட்லியின் தீவிர விசிறியாகி விட்டார் டானிலி.

வெறித்தனமான ரசிகை...
ஒரு கட்டத்தில் தீவிர ரசிகையான டானிலி, வெறித்தனமான ரசிகையாகி விட்டார். பிராட்லியை விட்டு கண நேரம் கூட பிரிய டானிலிக்கு மனம் வரவில்லை. இதனால் பிராட்லியின் கட் அவுட் ஒன்றை தயார் செய்து விட்டார் டானிலி.

எங்கேயும், எப்போதும்...
அதிலிருந்து ஜாக்கிங் செல்வதில் தொடங்கி ஷாப்பிங், குக்கிங் என எப்போதும் பிராட்லியின் கட் அவுட்டை தனது அருகிலேயே வைத்துக் கொள்கிறார் டானிலி.

பெட் ரூமிலும்...
கணவரின் அனுமதியோடு பிராட்லியின் கட் அவுட்டை தனது படுக்கையறையிலும் படுக்க வைத்துக் கொள்கிறாராம்.

பிரபலம்...
முதலில் டானிலியின் இந்த செயல் பார்ப்பதற்கு வேடிக்கைத் தனமாக தோன்றினாலும், இந்த கட் அவுட் மூலம் பிராட்லியை விட பிரபலமாகி விட்டார் டானிலி.

போட்டோ எடுக்கும் ரசிகர்...
பிராட்லியின் மற்றொரு ரசிகர் டானிலி, பிராட்லியின் கட் அவுட்டும் உள்ளதை படம் பிடித்துக் கொடுக்கிறாராம்.

10,000 ரசிகர்கள்...
பிராட்லியின் கட் அவுட்டுடன் தான் உள்ள புகைப்படங்களை தனது இணையப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்கிறார் டானிலி. இப்புகைப்படங்களைப் பார்ப்பதற்கென்றே டானிலிக்கு 10,000க்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

சுயசரிதை...
தற்போது ‘பிராட்லியுடன் எனது வாழ்க்கை' என்ற பெயரில் தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி வருகிறார் டானிலி. விரைவில் இப்புத்தகத்தை வெளியிட டானிலி திட்டமிட்டிருக்கிறார்.

முன்பதிவு...
ஆனால், அதற்கு முன்னதாகவே இப்புத்தகம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகம் காணப்படுகிறது. ஆம், இப்போதே 10,000க்கும் மேற்பட்டோர் இப்புத்தகத்திற்கு முன் பதிவு செய்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.












Click it and Unblock the Notifications