கமலா ஹாரிசை எளிதில் வீழ்த்தி விடுவேன்.. ஜோ பைடன் விலகிய நிலையில் டொனால்டு டிரம்ப் அதிரடி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக இருந்த ஜோ பைடன், போட்டியில் இருந்து விலகியிருப்பதால் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் என்றால் எளிதில் வெற்றி பெற்று விடுவேன் என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக மீண்டும் களம் இறங்க முடிவு செய்து இருந்த ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 81 வயதான ஜோ பைடன் பிரசாரத்தின் போது தடுமாறியதால் அவர் மீதான நம்பிக்கை ஜனநாயக கட்சியினருக்கே குறைந்து போனது.

இதனால், அதிபர் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேன்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். முன்னாள் அதிபர் ஒபாமாவும் இந்த கருத்தை முன்வைத்து இருந்தார். பென்சல்வேனியாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம் அவருக்கு பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
போதாக்குறைக்கு ஜோ பைடனும் தடுமாறியதால் டிரம்ப் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்ற பேச்சு அடிபட தொடங்கியது. இதனால், ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்காது எனக் கருதிய ஜனநாயக கட்சியினர் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் தனது முடிவில் இருந்து பின் வாங்க மாட்டேன் என்று கூறி வந்த ஜோ பைடன் திடீர் திருப்பமாக அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் அல்லது ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என சொல்லபட்டது.
ஆனால், ஜோ பைடன் வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில், கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக கிட்டத்தட்ட உறுதி என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் சிஎன் என் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், "கமலா ஹாரிஸ் என்றால் எளிதில் வீழ்த்திவிடுவேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications