கண் இமைக்கும் நேரத்தில்.. மக்கள் பார்க்கும் போதே.. நொறுங்கிய பல மாடி கட்டிடம்.. இஸ்ரேல் அட்டாக்
பெய்ரூட்: இஸ்ரேலுக்கும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு உச்சம் அடைந்து உள்ளது. இந்த மோதலுக்கு மத்தியில் லெபனானின் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தை இஸ்ரேலிய ஏவுகணை தாக்கிய வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹோர்ஷ் பெய்ரூட் என்ற பூங்காவிற்கு அடுத்துள்ள தயோனே பகுதியில் அந்த பல மாடி கட்டிடம் அமைந்து இருந்ததாக கூறப்படுகிறது. மக்கள் சாதாரணமாக நடந்து சென்று கொண்டு இருக்கும் போது.. திடீரென ராக்கெட் ஒன்று விழுந்து.. அந்த கட்டிடம் ஒரு நொடியில் சுக்குநூறாக உடைந்து உள்ளது. ஏவுகணைத் தாக்குதலின் தாக்கம் காரணமாக கண் இமைக்கும் நேரத்தில் அந்த கட்டிடமே காணாமல் போய் உள்ளது.

இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ஒரு சில நொடிகளில் முழு கட்டமைப்பும் உடனடியாக இடிந்து விழுந்த வீடியோ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு சுமார் 40 நிமிடங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அரபு மொழியில் இதற்கான முன்னெச்சரிக்கையை வெளியிட்டார். பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் வசிப்பவர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தார். அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
ஏற்கனவே லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இடையே ஹிஸ்பொல்லாவின் இரண்டாம் கட்ட தலைவர் மற்றும் துணைச் செயலாளர் நைம் காசிம் லெபனானில் இருந்து ஈரானுக்கு தப்பிச் சென்றதாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இயங்கும் எரெம் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனான் மற்றும் சிரியாவிற்கு அரசுமுறைப் பயணமாக ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி பயன்படுத்திய விமானத்தில் காசிம் தப்பித்ததாக செய்தியில் கூறப்பட்டு உள்ளது. இந்த விமானத்தில் அவர் ரகசியமாக பயணம் செய்துள்ளார். காசிம் கடந்த அக்டோபர் 5 அன்று பெய்ரூட்டில் இருந்து புறப்பட்டு ஈரானுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இஸ்ரேலால் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக இஸ்லாமிய அமைப்புகளின் உயர்மட்ட தலைவர்கள் அவரை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டதாக கூறப்பட்டு உள்ளது.
1. கடந்த அக்டோபர் 17, 2024 அன்று, ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார் இறந்ததாக இஸ்ரேல் அறிவித்தது.
2. ஹசன் நஸ்ரல்லா: லெபனானின் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ், செப்டம்பர் 28, 2024 அன்று கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. ஹிஸ்புல்லாவை பல வருடங்கள் வழி நடத்திய தலைவர் இவர். இப்படிப்பட்ட நிலையில்தான் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இடையே ஹிஸ்பொல்லாவின் இரண்டாம் கட்ட தலைவர் மற்றும் துணைச் செயலாளர் நைம் காசிம் லெபனானில் இருந்து ஈரானுக்கு தப்பிச் சென்றதாக செய்தி வெளியாகி உள்ளது.
3. ஃபட்டா ஷெரிப்: இஸ்ரேலிய இராணுவம் 2024 செப்டம்பர் 30 அன்று லெபனானில் ஹமாஸ் தலைவர் ஷெரீப்பை கொன்றதாக அறிவித்தது.
4. அலி கராக்கி: ஹெஸ்பொல்லாவின் உயர்மட்ட தளபதிகளில் ஒருவரான அலி கராக்கி நஸ்ரல்லாவை கடந்த மாதம் இஸ்ரேல் கொன்றதாக அறிவித்தது. நிலத்தடி பதுங்கு குழியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல்வேறு நிலைகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications