இனி இந்தியாவை தொடுங்க பார்க்கலாம்.. கூடுதலாக கைக்கு வரும் எஸ் 400.. ரஷ்யா சொன்ன குட்நியூஸ்!
மாஸ்கோ: பாகிஸ்தானுக்கும், நமக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாகிஸ்தானின் ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்களின் தாக்குதலில் இருந்து நம்மை ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணை சிஸ்டம் தான் காப்பாற்றியது. இதனால் தான் பாகிஸ்தானால் நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் தான் நம் நாட்டுக்கு மேலும் 2 எஸ் 400 ஏவுகணை சிஸ்டமை அடுத்த ஆண்டு வழங்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த எஸ் 400 என்பது என்ன? இது ஏன் நம் நாட்டுக்கு பலமாக பார்க்கப்படுகிறது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. நம் நாட்டின் ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியது. கடந்த 7 ம் தேதி 9 பயங்கரவாத முகாம்கள், கடந்த 10ம் தேதி காலையில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டது.

நம் நாடு தொடுத்த அதிரடி தாக்குதலில் கதறிய பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்காக நம்மிடம் சரணடைந்தது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. முன்னதாக பாகிஸ்தானும் நம்மை தாக்க முயன்றது. பாகிஸ்தானும் நம் நாட்டை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியது. இவை அனைத்தும் வானில் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. இதனால் நம் நாட்டுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானின் தாக்குதலில் இருந்து நம் நாடு தப்பிக்க முக்கிய காரணம் எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு சிஸ்டம் தான். இது ரஷ்யாவின் தயாரிப்பாகும். நம் நாட்டில் இது ‛சுதர்ஷன சக்ரா' என்று நம் நாட்டில் அழைக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நம் நாட்டை நோக்கி ஏவிய ஏவுகணை, ட்ரோன்களை இந்த எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் தான் இடைமறித்து தாக்கி அழித்தது.
கடந்த 2018 ம் ஆண்டில் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மொத்தம் 5 எஸ் 500 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் கடந்த 2021ம் ஆண்டு கிடைத்தது. தற்போது வரை எஸ் 300 ஏவுகணை சிஸ்டம் 3 எண்ணம் நமக்கு கிடைத்துள்ளது. இன்னும் 2 வரவில்லை. இதனை வழங்க வேண்டும் என்று நம் நாடு ரஷ்யாவுக்கு கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் தான் மீதமுள்ள எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை 2026ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்யாவின் துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எஸ் 400 ஏவுகணை சிஸ்டம் திறமையாக செயல்பட்டதை நாங்கள் கேள்விப்பட்டோம்.இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு நீண்டகாலமாக தொடர்ந்து வருகிறது. மீதமுள்ள இரண்டு S-400 சிஸ்டமை நாங்கள் 2025-26ம் ஆண்டுக்குள் வழங்குவோம்'' என்றார்.
மேலும் ட்ரோன் தாக்குதல் பற்றி அவர் கூறுகையில், ‛‛நாங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம். மேலும் எங்கள் அமைப்புகள் தொடர்ந்து நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவர் வருவதற்கான தேதி இன்னும் உறுதியாகவில்லை. தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படலாம்'' என்றார். .
ரஷ்யா துணை தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறியுள்ள இந்த தகவல் நம் நாட்டுக்கு குட்நியூஸாக உள்ளது. ஏற்கனவே 3 எஸ் 400 ஏவுகணை சிஸ்டம் நம்மிடம் உள்ள நிலையில் இன்னும் 2 நமக்கு கிடைக்கும். இதன்மூலம் பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தலை எளிதாக நம்மால் சமாளிக்க முடியும். அந்த நாடுகளில் இருந்து தாக்குதலுக்கு வரும் ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்களை தாக்குதலை இந்த எஸ் 400 ஏவுகணை சிஸ்டமால் முன்கூட்டியே கணித்து அதனை அழிக்கும் தன்மை எஸ் 400 தடுப்பு சிஸ்டமிற்கு உள்ளது.
இந்த எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் (S 400 Air Defence System) என்பது நவீன வசதியுடன் கூடிய வான்வெளி பாதுகாப்பு அமைப்பாகும். இது நம் நாட்டின் ‛சுதர்சனா சக்ரா ' என அழைக்கப்படுகிறது. இது எதிரி நாடுகளின் ஏவுகணைகளை 600 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் வரும்போதே கண்டுபிடித்து விடும். அதன்பிறகு அந்த ஏவுகணை பாதையை கண்காணித்து 400 கிலோமீட்டர் தொலைவுக்குள் வரும்போது இடைமறித்து அழிக்கும் வல்லமை கொண்டது. அதேபோல் போர் விமானங்கள், ட்ரோன்கள் குரூஸ் வகை ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.
இந்த எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் 4 வகையான ஏவுகணைகளை ஏவி வானில் வரும் டார்க்கெட்டுகளை அழிக்கும். இது advanced Phased Array Radar-யை கொண்டுள்ளது. உள்ளது. இது ஒரே நேரத்தில் 100 இலக்குகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான் உடனான மோதலின்போது அந்த நாட்டின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தாக்கி அழித்தது. பஞ்சாப், பாகிஸ்தான் எல்லையில் உள்ளதால் அங்குள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் எஸ் 400 நிறுவப்பட்டது. இந்த எஸ் 400 ஏவுகணை சிஸ்டமை அழித்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் அதில் உண்மை இல்லை. இப்படியான சூழலில் தான் ஒப்பந்தத்தின்படி மேலும் 2 எஸ் 400 ஏவுகணை சிஸ்டம் நம் நாட்டுக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications