அமெரிக்க சாலை.. இப்போது சீன பொருளாதாரம்.. தொடர்ந்து கலக்கும் ம.பி.முதல்வர் சௌஹான்
ம.பி. சாலைகள் அமெரிக்க சாலைகளை விட மேல் என்று அளந்துவிட்ட மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான், தற்போது மோடி தலைமையிலான ஆட்சியில் சீன பொருளாதாரத்தை முந்தும் என தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: பணமதிப்பிழப்பால் பொருளாதாரம் சரிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் மோடி தலைமையிலான ஆட்சியில் சீன பொருளாதாரத்தை இந்தியா முந்தும் என்று மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார் செளஹான். அப்போது செய்தியாளர்களிடம் கூறும் போது அமெரிக்காவில் சாலைகள் மிக மோசம் என்றும் வாஷிங்டன் சாலைகளுக்கு மத்தியப் பிரதேச மாநில சாலைகள் எவ்வளவோ பரவாயில்லை என்றும் அடித்து விட்டு அலற விட்டார்.
இதற்கு நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து தீர்த்துவிட்டனர். இந்திய சாலைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் ஒரு முதல்வர் இவ்வாறு கதை விடுவது சரியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவில் சௌஹான்
6 நாள் பயணமாக அமெரிக்கா ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் அமெரிக்கா வந்துள்ளார். அவர் நேற்று நியூயார்க்கில் மூத்த தொழிலதிபர்களுடன் உரையாடினார். அப்போது தனது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார். அமெரிக்க சாலைகளை மோசம் என்று கூறி கலங்கடித்தார்.

இரட்டிப்பாக்குவதே...
சௌஹான் பேசுகையில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கே நான் முன்னுரிமை கொடுக்கிறேன். வேளாண்மை நாங்கள் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்றால் தானாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். சுத்தமான குடிநீர், சாலைகள், மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்திய பொருளாதாரம்
பிரதமர் மோடி தலைமையில் இந்திய பொருளாதாரம் மற்ற முக்கிய நாடுகளின் பொருளாதாரத்தை காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. விரைவில் சீன பொருளாதாரத்தை முந்தி செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்
இந்தியா மற்ற நாடுகளை காட்டிலும் அனைத்திலும் முன்னோடியாக திகழ்வது அனைவருக்கும் பெருமைதான். ஆனால் இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில் மோடி தலைமையில் சீன பொருளாதாரத்தை முந்துவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று பொதுமக்கள் கேலி செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications