“ஆஸ்திரேலியாவுக்குப் போகாதீங்க.. அது ஒரு பொறி!” - இந்தியப் பெண் வெளியிட்ட வீடியோ! காரணம் இதுதான்!
சிட்னி: இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கிறார்கள். பலர், அந்த நாடுகளிலேயே குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிடுகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய பெண் ஒருவர் தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ பெரிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
பொதுவாக வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆனவர்கள், அங்குள்ள வேலை கலாச்சாரம், பணி சூழல், வாழ்க்கை தரம் ஆகியவை குறித்து ஆஹா, ஓஹோ என்று பதிவிட்டிருப்பார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவை சேர்ந்த அங்கஷா என்கிற பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார். இது குறித்து தனது வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்து நிம்மதியான வேலையை பெற்று, சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்தேன்! ஆனால் 6 மாதங்களிலேயே இந்த பொறியில் நான் சிக்கிக்கொண்டேன்.
இந்தியாவில் இருக்கும்போது எதுவெல்லாம் ஆடம்பரம் என்று கருதப்பட்டதோ, அதெல்லாம் ஆஸ்திரேலியாவில் சாதாரணமாக மாறி இருக்கிறது. வார இறுதி நாட்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுத்தால்.. விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதிகாலை 6:00 மணிக்கு எழுந்து ஜிம் செல்வது, பொழுது போக்குக்காக 10 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்வது.. என வாழ்க்கை முறை ஆரோக்கியமானதாக மாறியுள்ளது.
சுத்தமான காற்று, பாதுகாப்பான நகரங்கள் மற்றும் அழகான சூரிய அஸ்தமனங்களை வார நாட்களில் ரசிப்பது இங்கு இயல்பாக உள்ளது. இரவில் தனியாக நடக்கும்போது பயமின்றி பின்னால் யாரும் வருகிறார்களா.. என்று திரும்பிப் பார்த்து அச்சப்பட்டு நடக்கும் அவசியம் அங்கு இல்லை. பெண்களுக்கு உரிய சுதந்திரம் கிடைக்கிறது.
பணம் குறித்த தேவையற்ற கவலைகள் குறைந்து, மன அமைதி கிடைக்கிறது. எனக்கு இப்பொழுது அமைதி, பாதுகாப்பு மற்றும் இயற்கை உடன் இணைந்த வாழ்வு அடிமையாகி விட்டது. இங்கிருந்து என்னால் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப முடியாது. இது போன்ற ஒரு பொறியில் தான் நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன்" என்று ஆஸ்திரேலியாவில் இருக்கும் நல்ல வாழ்க்கை முறையை இந்திய பெண் கிண்டலாக பதிவு செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications