கனவிலும் நினைக்காத ட்விஸ்ட்.. ஈரானின் முடிவால் நிஜமாகவே இந்தியாவுக்கு பெட்ரோல் விலையில் மாற்றம்?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழலில், யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) வணிகக் கப்பல்களுக்காக முழுமையாகத் திறந்துவிடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. சில வாரங்களாக நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் கடல்வழித் தடைகள் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றம் உலக நாடுகளுக்கு ஒருபுறம் நிம்மதியைத் தந்தாலும், மறுபுறம் பல மலைப்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அது என்ன தெரியுமா?
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதாவது , வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது.

எண்ணெய் இறக்குமதி
குறிப்பாக, இந்தியாவைப் போன்ற கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளுக்கு இது ஒரு பெரிய நிம்மதியாகப் பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டால் மட்டுமே பெட்ரோல் தட்டுப்பாடு முழுமையாக நீங்கிவிடுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
சர்வதேச எரிசக்தி முகமை ஏற்கனவே எச்சரித்தது போல, கடந்த காலத்தில் ஏற்பட்ட விநியோகத் தடை காரணமாக எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் காலியாகியுள்ளன. இந்த இடைவெளியை நிரப்ப இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.
பெட்ரோல் டீசல் விலை
எனவே, கப்பல் போக்குவரத்து தொடங்கினாலும், சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பக் கூடுதல் காலம் எடுக்கும் என்பதே கசப்பான உண்மையாகும். இருப்பினும், ஜலசந்தி திறக்கப்பட்டதால் போக்குவரத்துச் செலவு குறைந்து, கச்சா எண்ணெய் வரத்து சீராகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்தியாவுக்குக் கிடைக்கப்போகும் பலன்கள் இதில் மிக அதிகம். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. இப்போது கப்பல் போக்குவரத்து சுமூகமாகத் தொடங்கினால், வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவை நாம் எதிர்பார்க்கலாம். இது சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்திய சந்தை இந்த அறிவிப்பை மிகுந்த மலைப்புடன் கவனித்து வருகிறது.
மீண்டும் பதற்றம் அதிகரிக்குமா?
ஈரான் எடுத்துள்ள இந்த முடிவு எந்த அளவுக்கு நிலையானது என்பதில் இன்னும் சிலருக்குச் சந்தேகம் இருக்கலாம். தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறையாகப் பின்பற்றப்பட்டால் மட்டுமே இந்த நிலை நீடிக்கும். ஒருவேளை மீண்டும் பதற்றம் அதிகரித்தால், இந்தச் சாதகமான சூழல் தலைகீழாக மாறவும் அபாயம் உள்ளது.
அதனால் தற்போதைய இந்தத் திருப்பத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்குச் சாதகமாக எப்படி மாற்றப்போகின்றன என்பதுதான் இப்போது இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. வரும் நாட்களில் நடக்கப்போகும் அடுத்தடுத்த நகர்வுகள், பெட்ரோல் விலையில் நிஜமான மாற்றத்தைக் கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications